திருவள்ளூர்:இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி, கடந்த 01.08.2022 முதல் நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளிலும், 3,657 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, ஆதார் எண் விபரங்களை படிவம்- 6பி-ல் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் பெற்று வருகின்றனர்.
இப்பணியில், போதிய முன்னேற்றம் காணப்படாததால், பொதுமக்கள் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக வரும், 4 மற்றும் 5ம் தேதி, அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் இருப்பின் அவர்கள் இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை அளித்து வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கலாம்.
எனவே பொதுமக்கள் அனைவரும் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.