திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் ஊராட்சியில், 1951ம் ஆண்டு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவங்கப்பட்டது. இங்கு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளியில், போதிய வகுப்பறை வசதிக்காக, 93.2 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு தளங்களுடன், ஆறு வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று நடந்தது.
விழாவிற்கு, ஊராட்சி தலைவர் ராணி தலைமை வகித்தார். முதல்வர் ஸ்டாலின், ராணிபேட்டையிலிருந்து, காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
அதை தொடர்ந்து, கேளம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்று, அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தனர்.
மறைமலை நகர்
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி, திருத்தேர் பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டும் விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சியை, தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்ததை தொடர்ந்து, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, கட்டுமான பணிகளுக்காக, அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
அச்சிறுபாக்கம்
அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பழமையான பள்ளி கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
தற்போது, தமிழக அரசு நிதி ஒதுக்கியதன் பேரில், எலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கு, 31 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று, புதிய பள்ளி கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. இதில், ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.
பவுஞ்சூர்
செய்யூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள தொடக்க பள்ளிகளில், போதிய கட்டட வசதி இல்லாததால், கூடுதல் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்க, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
அதையடுத்து, சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளத்துார், சூணாம்பேடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 16 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகள்.
லத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட அம்மனுார், புத்துார், லத்துார் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 12 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகள்.
ஆகிய பள்ளிகளுக்கு, தலா 31 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிக்கல் நாட்டு விழா, நேற்று லத்துார் ஒன்றியத்தில், திருவாதுார் பள்ளியிலும், சித்தாமூர் ஒன்றியத்தில், சின்ன கயப்பாக்கம் பள்ளியிலும் நடந்தது.