அனுப்பர்பாளையம் : திருப்பூர், பாத்திர தொழிலாளர்களுக்கு, புதிய சம்பள ஒப்பந்தம் குறித்து, அனைத்து தொழிற் சங்க கூட்டு கமிட்டியினர், எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திர உற்பத்தியாளர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். புதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி, கலெக்டர் மற்றும் தொழிலாளர் துறை உதவி கமிஷனர் ஆகியோரை சந்தித்து தொழிற்சங்கத்தினர் மனு அளித்தனர்.
இதனால், தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (சமரசம்) நாளை (3ம் தேதி) மாலை 3:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ள சம்பள ஒப்பந்தம் குறித்தான பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு, எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திர உற்பத்தியாளர் சங்கத்திற்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பி உள்ளார்.