வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன் : அடுத்தாண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே, 51, திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியரசு கட்சி வேட்பாளருக்கான போட்டியில்அவர் களமிறங்கவுள்ளதாகவும், வரும், 15ல் பிரசாரத்தை துவங்கவுள்ளதாகவும் அமெரிக்க பத்திரிகைகளில்செய்திகள் வெளியாகி உள்ளன.
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்தாண்டு நவம்பரில் நடக்கவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 76, ஏற்கனவே அறிவித்து விட்டார்.

அமெரிக்காவில் பிரதான கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள் சார்பில், அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், அந்தந்த கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவைப் பெற வேண்டும்.
அரசியல் அனுபவம்
இதற்காக ஒவ்வொரு மாகாணமாக சென்று, தங்கள் கட்சிகளின் உறுப்பினர்களிடையே இவர்கள் பிரசாரம் செய்வர். இறுதியாக நடக்கும் கட்சி மாநாட்டில், தேர்வு செய்யப்பட்ட பிரநிதிகள் பங்கேற்று, தங்கள் கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்வர்.
தேர்தல் செலவுகளை ஏற்கும் திறன், நிதி திரட்டுதல், ஊடகங்களின் ஆதரவு, அரசியல் அனுபவம் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவரே, வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார்.
இதனால், டொனால்டு டிரம்ப் குடியரசு கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், குடியரசு கட்சியின் மூத்த நிர்வாகியான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலேயும் வேட்பாளர் போட்டியில் குதிக்க முடிவு செய்துள்ளதாக, அமெரிக்க பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.
நிக்கி ஹாலேயின் பெற்றோர், நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். நிக்கி ஹாலே, இதற்கு முன் தெற்கு கரோலினா மாகாண கவர்னராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க துாதராகவும் பணியாற்றியுள்ளார்.
டொனால்டு டிரம்பின் தீவிர விசுவாசியாக இவர் இருந்து வந்தார். டிரம்பின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரித்து வந்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என்றும் அறிவித்து இருந்தார்.
ஆனால், 2021ல் அமெரிக்க பார்லிமென்டில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்குப் பின், நிக்கி ஹாலே நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது.
பரபரப்பு
அடுத்த அமெரிக்க அதிபராக இளைஞர் ஒருவர் தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும், மூத்த தலைவர்கள், இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் நிக்கி ஹாலே களம் இறங்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக கட்சி உறுப்பினர்களிடையே, வரும் 15ம் தேதி முதல், அவர் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த சில நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிக்கி ஹாலே வெளியிட உள்ளதாகவும் அமெரிக்க பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் ஒருமனதாக வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது நிக்கி ஹாலேயும் போட்டியில் குதித்துள்ளது, அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.