செங்கல்பட்டு:செங்கல்பட்டு களத்துமேட்டு தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் பிரகாஷ், 37; ரேஷன் கடை விற்பனையாளர். இவர், திருப்போரூர், கரும்பாக்கம் அடுத்த விரால்பாக்கம் பகுதி ரேஷன் கடையில், வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், செங்கல்பட்டு வேதாசலம் நகரில் உள்ள தனியார் டீக்கடைக்கு செல்வதற்கு, இருசக்கர வாகனத்தின் மேல், 'பேக்'கை வைத்துவிட்டு சென்றார்.
அதன்பின், திரும்பி வந்து பார்த்தபோது, பேக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதில், பொங்கல் பரிசு தொகை 27 ஆயிரம் ரூபாயும், கடையில் விற்பனை செய்த, 18 ஆயிரத்து 950 ரூபாயும், இரண்டு கைரேகை வைக்கும் 'மிஷின்'களும் இருந்தன. அவற்றை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, பச்சையம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த கணேஷ், 40, என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து, 11 ஆயிரம் ரூபாயையும், இரண்டு கைரேகை வைக்கும் மிஷின்களையும் பறிமுதல் செய்தனர். அதன்பின், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில், நேற்று போலீசார் அடைத்தனர்.