அவிநாசி ; வாரணவாசிபாளையம் ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீமாகாளியம்மன் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலத்துடன் நேற்று நடந்தது.
அவிநாசி ஒன்றியம் தொரவலுார் ஊராட்சிக்குட்பட்ட வாரணவாசி பாளையம் ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீமாகாளியம்மன் கோவில் உள்ளது. இதன் கும்பாபிேஷகம் கோலாகலத்துடன் நேற்று நடந்தது.
முன்னதாக, கடந்த 27ம் தேதி மங்கள இசை, கணபதி, மகாலட்சுமி, நவகிரக ஹோமம் உள்ளிட்டவற்றுடன் யாகசாலை பூஜை தொடங்கியது.
தீர்த்தம் எடுத்து வருதல், காப்பு கட்டுதல் என முதல் கால யாக வேள்வி பூஜைகள், தொடர்ந்து பூர்ணாகுதி, திரவியாகுதி, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனைகளுடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக வேள்வி பூஜைகள் நடந்தன.
நான்காம் கால யாக வேள்வியில் நாடி சந்தனம், கலசத்திற்கு உயிர் ஊட்டுதல், தீபாரதானையுடன் யாகசாலையில் இருந்து கலசங்கள் கோவிலை வலம் வந்தன.
அபிஷேகபுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் கோவில் சண்முக சிவாச்சாரியார் தலைமையில் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. மகாபிஷேகம், அலங்கார பூஜைகளுடன் தசதரிசனம், மகா தீபாராதனையுடன் விழா நடந்தது.
அம்மன் கலைக்குழுவின் ஸ்ரீ சக்தி பண்பாட்டு மையம் சார்பில் ஒயிலாட்டம், வள்ளி கும்மியாட்டம் மற்றும் கொங்கு பண்பாட்டு மையத்தின் கொங்கு பெருஞ்சலங்கையாட்டமும் நடைபெற்றது.
பக்தர்கள் அனைவருக்கும் கோவில் விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை நந்தி தங்கவேல், மிதுன் ராம் பழனிச்சாமி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.