சூலூர் : சூலூர் சுற்றுவட்டார பகுதியில், வீடுகள், பெட்டிக்கடைகளில், 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை தாராளமாக நடக்கிறது.
சூலூர் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்குகின்றன. வெளி மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.
இவர்களை குறிவைத்து, சட்டவிரோத மது விற்பனை அனைத்து பகுதிகளிலும் ஜோராக நடக்கிறது.
பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட, 15 வார்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும், ராசிபாளையத்தில் டீக்கடை அருகில் உள்ள ஒரு வீட்டிலும், காடாம்பாடி, செங்கத்துறை, காங்கயம்பாளையம், அப்பநாயக்கன்பட்டி, குளத்தூர், மு.க.புதூர், அரசூர் உள்ளிட்ட கிராமங்களில் குறிப்பிட்ட சில வீடுகளிலும் மது விற்கப்படுகிறது.
பாப்பம்பட்டி, கள்ளப்பாளையம் பகுதியில் பெட்டிக்கடைகளிலும், முட்டு சந்துகளிலும் மது விற்பனை சர்வ சாதாரணமாக நடக்கிறது. காட்டம்பட்டியில் ஒரு பெட்டிக்கடையில், காலை 6:00 மணி முதலே வியாபாரம் ஜம்மென்று நடக்கிறது.
வெளி மாநில தொழிலாளர்கள் அதிக விலை கொடுத்து, மது வாங்குகின்றனர். இதேபோல், சூலூரில் செயல்படும் இரு தனியார் பார்களில், 24 மணி நேரமும் விற்பனை நடக்கிறது.
மது விற்பனையில் பெண்கள்
சட்டவிரோதமாக பதுக்கி மது விற்பதில், ஆண்களை மிஞ்சும் அளவுக்கு பெண்களும் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
ஆனால், மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது, போலீசார் கண்துடைப்புக்கு வழக்குப்பதிவு செய்து விட்டு, கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.
அப்புறம், மாலையானால் கலெக்ஷனுக்கு போக வேண்டிய இடமாச்சே!