சேலம்:பல மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சேலத்தில் பிரதமர் மோடி உருவம் அச்சிட்ட, அங்கவஸ்திரத்துக்கு, 'ஆர்டர்'கள் கிடைத்துள்ளன.
நடப்பாண்டில் கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா போன்ற பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்த, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
இதற்கான பணிகளை, பா.ஜ., - காங்., உள்ளிட்ட தேசிய கட்சிகள், மாநில அளவில் பெரிய கட்சிகள் தொடங்கி விட்டன.
இதை முன்னிட்டு, வட மாநில வியாபாரிகள், சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில், பிரதமர் நரேந்திர மோடி உருவம் அச்சிட்ட, அங்கவஸ்திரத்துக்கு அதிகளவில், ஆர்டர் கொடுத்து வருகின்றனர்.
கடந்த ஜனவரியில் மட்டும், 1.20 லட்சம் அங்கவஸ்திரங்களுக்கு, ஆர்டர் கிடைத்ததாக, உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து இளம்பிள்ளையை சேர்ந்த அங்கவஸ்திர உற்பத்தியாளர் குமார் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள அங்கவஸ்திர உற்பத்தி கூடங்களுக்கு, 2022 டிசம்பர் வரை பிற படங்களுடன் ஆர்டர் கிடைத்தது.
ஜனவரியில் பிரதமர் மோடி, காங்., - எம்.பி.,ராகுல் உருவங்கள் அச்சிட்ட அங்கவஸ்திரத்துக்கு, ஆர்டர் கிடைத்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.