வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை : கோவை கலெக்டராக சமீரன், தமிழக அரசின் திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில், மெதுவாக செயல்பட்டதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
2021 ஜூனில், கோவை கலெக்டராக நியமிக்கப்பட்ட சமீரன், ஜன.,30ல் சென்னை மாநகராட்சி இணை கமிஷனராக மாற்றப்பட்டார். ஓராண்டு, 8 மாதங்களே கோவையில் பணிபுரிந்திருக்கிறார்.
ஆளுங்கட்சியான தி.மு.க.,வுக்கு, கோவையில் எம்.எல்.ஏ.,க்கள் இல்லாததால், தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு பலமுறை வந்து, பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்திருக்கிறார்; அடிக்கல் நாட்டிச் சென்றிருக்கிறார்.
அத்திட்டங்களில் பல, இன்னும் அறிவிப்பு நிலையிலேயே இருக்கின்றன; செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில், மந்தமான நிலை நிலவியதே, கலெக்டர் மாற்றப்படுவதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.
கண்டுகொள்ளப்படாத திட்டங்கள்
அ.தி.மு.க., ஆட்சியில் இழுத்தடிக்கப்பட்ட விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலம் கையகப்படுத்த, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ரூ.1,132 கோடி ஒதுக்கப்பட்டது. 18 மாதங்கள் கடந்தும் இன்னும் முழுமையாக நிலம் கையகப்படுத்தவில்லை. அரசுக்கு சொந்தமான நிலங்களை துறை ரீதியாக மாற்றிக்கொடுக்கும் பணியும், இன்று வரை தொய்வாகவே நடக்கிறது.
மேற்குப்புறவழிச்சாலை திட்டத்தில், முதல்கட்டமாக, சுகுணாபுரம் மைல்கல் முதல் சிறுவாணி ரோடு செல்லப்பம்பாளையம் வரையிலான, 11.8 கி.மீ., துாரத்துக்கு ரோடு போடுவதற்கு, ரூ.210 கோடி ஒதுக்கப்பட்டு விட்டது. நிதியாண்டு முடிய, இரு மாதங்களே இருக்கின்றன; இன்னும் வேலை துவங்கவில்லை.
தமிழக முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு கூட்டத்திலும்மறக்காமல் குறிப்பிடும் 'மெட்ரோ' ரயில் திட்டம், செம்மொழி பூங்கா திட்டங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி, இறுதி வடிவம் கொடுக்கவில்லை. இன்னமும், அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கிய பாலம் வேலைகளே செய்யப்படுகின்றன.
வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் திட்டத்தை தேவையின்றி, முடக்கி வைத்திருப்பதால், அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது. கோவை மக்களின் மன நிலவரத்தை தெரிவிக்காமல், பஸ் ஸ்டாண்டை இட மாற்றம் செய்யப்போவதாக, அவர் தெரிவித்த கருத்து, தேவையற்ற சர்ச்சையை உருவாக்கியது.
வ.உ.சி.,யை பெருமைப்படுத்தும் விதமாக, பூங்கா வளாகத்தில் முழு உருவச்சிலை நிறுவப்படும் என, சட்டசபையில் முதல்வர் அறிவித்து ஓராண்டுக்கு மேலாகி விட்டது; இன்னும் சிலை வைக்கப்படவில்லை.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கோவைக்கான 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கட்டுமான துறையினரிடம் பலமுறை ஆலோசனை பெறப்பட்டது. இன்னும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படாமல் இழுத்துக் கொண்டே இருக்கிறது.
![]()
|
அன்னுாரில் விவசாயிகள் நிலங்களை கையகப்படுத்தி, தொழிற்பேட்டை அமைக்கும் திட்டம், தி.மு.க., அரசுக்கு மிகப்பெரிய அளவில் அவப்பெயரை ஏற்படுத்தி விட்டது.
விவசாயிகளுக்கு ஆதரவாக, பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தியதால், தி.மு.க.,வுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
பிரஸ் கிளப்பில் நிருபர்களை சந்தித்த விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட திரண்டு நின்றிருந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, சமரசம் செய்து, திருப்பி அனுப்பினர்.
இப்பிரச்னையில், நீலகிரி எம்.பி., ராஜா மற்றும் பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜி ஆகியோர், விவசாய நிலங்கள் கையகப்படுத்த மாட்டோம் என உறுதியளித்த பின்பே, அப்பிரச்னை ஓய்ந்தது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதில், கலெக்டர் சமீரன் கூடுதல் கவனம் செலுத்தாததால், தமிழக அரசின் உயரதிகாரிகள் மத்தியில் நெருடலை ஏற்படுத்தியது.
விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி, கிறிஸ்துமஸ் பண்டிகையன்று (டிச., 25) கோவையில் நிகழ்ச்சி நடத்த முடிவெடுத்து, தகவல் தெரிவிக்கப்பட்டது. அரசு விடுமுறை தினத்தன்று விழா நடத்த அதிகாரிகளிடம் எதிர்ப்பு கிளம்பி, சலசலப்பு ஏற்பட்டது. இதுவும் ஆட்சியாளர்களை முகம்சுளிக்க வைத்தது.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால், சென்னை மாநகராட்சிக்கு சமீரன் மாற்றப்பட்டிருப்பதாக, வருவாய்துறை உயரதிகாரிகள் மட்டத்தில் தகவல் பரவி வருகிறது.
அரசு துறை உயரதிகாரிகளை ஒருங்கிணைத்து, திட்டங்களை செயல்படுத்துவதில் போதிய அக்கறை காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டு முக்கியமாக சொல்லப்பட்டது. உதாரணத்துக்கு, மதுக்கரை மார்க்கெட் மெயின் ரோட்டை நான்கு வழிச்சாலையாக்க, ரூ.10.5 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. கடந்தாண்டு ஜூன், 4ல் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அடிக்கல் நாட்டினார். ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை நீர் வடிகால் கட்டி, ரோடு போடும் பணி இன்னும் ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது. அரசு துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம்.