பா.ஜ., கூட்டணியை பழனிசாமி கைவிடும் முடிவுக்கு வந்துள்ளதாக, அவரது ஆதரவு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், பழனிசாமி தரப்பினால், தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.
'அ.தி.மு.க., பணிமனை' என்ற பெயரில் இருந்த அலுவலகம், நேற்று 'தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பா.ஜ., தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி இயங்கி வரும் நிலையில், அ.தி.மு.க., பழனிசாமி தரப்பு, தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில், பணிமனை திறந்திருப்பது கேள்விக்குறியாகி உள்ளது.
மேலும், பிரசார பேனர்களிலும் பிரதமர் உள்ளிட்ட பா.ஜ., தலைவர்களின் புகைப்படங்களை தவிர்த்து இருந்தனர். இதனால், பா.ஜ., கூட்டணியில் இருந்து பழனிசாமி விலகி விட்டாரா; புதிய பெயரில் புதிய கூட்டணியை உருவாக்க பழனிசாமி முடிவு செய்துள்ளாரா என, பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், மாலை, 4:30 மணிக்கு, தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பேனர் மீது, ஸ்டிக்கர் ஒட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி என, மாற்றினர்.