கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே, காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதுபோல, காலனியாதிக்க மரபுகளை முறியடிக்கும் வகையில், 'சூட்கேஸ்' இல்லாமல், துணிப் பையை பயன்படுத்தும் முறையைத் தொடர்ந்தார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பட்ஜெட் ஆவணங்கள் தாக்கல் செய்வதற்காக, சூட்கேசில் வைத்து அந்த நாட்டு பார்லிமென்டுக்கு எடுத்து வரப்படும். நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகும், இதே நடைமுறை தொடர்ந்து இருந்தது.
நிறம் மாறினாலும், பெரும்பாலான நிதியமைச்சர்கள் சூட்கேஸ் பயன்படுத்தி வந்தனர்.
கடந்த ௨௦௧௯ல் நிதியமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் இந்த மரபை முறியடித்தார். சிவப்பு நிற பையில் பட்ஜெட் ஆவணங்களை எடுத்து வந்தார். 'காலனி ஆதிக்க மனப்பான்மையில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே, துணிப் பையில் எடுத்து வந்தேன்' என, அவர் அப்போது குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, காகிதமில்லா பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன்படி, 'டேப்லட்' எனப்படும் கையடக்க கம்ப்யூட்டர் வாயிலாக அவர் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த டேப்லட்டை, அவர் சிறிய துணிப் பையில் வைத்து எடுத்து வந்தார்.
இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறுவதற்கு செல்லும் முன், பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுப்பதற்கு 'போஸ்' கொடுத்தார். அப்போது துணிப் பையில் வைக்கப்பட்ட டேப்லட்டை கையில் வைத்திருந்தார். அந்தப் பையின் முகப்பில், தங்க நிறத்திலான அசோக சக்கரம் முத்திரை பதிக்கப்பட்டிருந்தது.
தன் வழக்கம்போல், சிவப்பு நிறத்திலான பையையே அவர் பயன்படுத்தினார். மேலும், சிவப்பு நிற சேலையையும் அணிந்து இருந்தார்.