புதுடில்லி : தங்களது தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கையை ஏற்காவிட்டாலும் பயனாளர்கள் தொடர்ந்து சேவையைப் பயன்படுத்துவதில் எந்தத் தடையும் இல்லை என மத்திய அரசுக்கு அளித்த உறுதிமொழியை விளம்பரப்படுத்தும்படி, 'வாட்ஸ்ஆப்' நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த வாட்ஸ்ஆப் நிறுவனத்தை, முன்பு 'பேஸ்புக்' என்றழைக்கப்பட்ட 'மெட்டா' நிறுவனம் விலைக்கு வாங்கியது.
கட்டுப்பாடுகள்
இதைத் தொடர்ந்து, வாட்ஸ்ஆப் செயலி, புதிய தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கையை, ௨௦௨௧ல் அறிவித்தது. இதன்படி, தன் பயனாளர்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கைக்கு நம் நாட்டில் பெரும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து இந்த கொள்கையை செயல்படுத்துவதை அந்த நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலை தளங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்கும் வகையில், தகவல் பாதுகாப்பு சட்டம் உருவாக்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
கடந்த, 2021 மே, 22ல் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு, வாட்ஸ் ஆப் நிறுவனம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கையை ஏற்கும்படி பயனாளர்களை வற்புறுத்த மாட்டோம்.
![]()
|
அதே நேரம், இது தொடர்பான நினைவூட்டல் அவர்களுக்கு அளிக்கப்படும். மத்திய அரசு தகவல் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தும் வரையில், எங்களுடைய சேவைகளை பயனாளர்கள் தொடர்ந்து பயன்படுத்த எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா குறிப்பிட்டதாவது:
தகவல் பாதுகாப்பு சட்டம் தொடர்பான மசோதாவை, நடப்பு பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்ததும் இது தாக்கல் செய்யப்படும். அதுவரை இந்த வழக்கில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
ஒத்திவைப்பு
இதையடுத்து அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: தகவல் பாதுகாப்பு சட்டம் தொடர்பான மசோதாவை தாக்கல் செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதனால், இந்த விஷயத்தில் காத்திருக்கலாம்.
இதற்கிடையே, மத்திய அரசுக்கு தான் அளித்த உறுதிமொழியை, வாட்ஸ்ஆப் நிறுவனம் பத்திரிகைகளில் முழு பக்க அளவில் விளம்பரம் செய்ய வேண்டும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது. வழக்கின் விசாரணை, ஏப்., மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.