திருச்சி:''ஈரோடு இடைத்தேர்தல் முடிவு, மிகப் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
திருச்சியில் நேற்று, செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது, வேட்பாளரை நியமிப்பது போன்றவை தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சு நடந்து வருகிறது.
அவசரம்
ஆளுங்கட்சியினர் பண பலத்தையும், அதிகார, அரசியல் இயந்திரத்தையும் தவறாக பயன்படுத்துகின்றனர்.
அவற்றை எதிர்கொள்ளும் வகையில், பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும்.
மக்கள் பணத்தை செலவு செய்து, பெரிய பேனா சிலை வைப்பதில் தி.மு.க.,வினர் அவசரம் காட்டுகின்றனர்.
பேனா சிலை வைக்கும் விவகாரம் தொடர்பான ஆலோசனையின் போது, பா.ஜ., சார்பில் பங்கேற்ற மீனவர் அணியை சேர்ந்த முனுசாமியை பேசுவதற்கு கூட அனுமதிக்கவில்லை.
பொது இடத்தில் சிலை வைக்கும் போது, மக்கள் கருத்தை மதிக்க வேண்டும்.
மக்கள் கருத்தை ஏற்காமல் தி.மு.க., அரசு, அழுத்தம் கொடுத்தால், மக்கள் அதை விரும்ப மாட்டார்கள்; வரும் தேர்தலில் அது பிரதிபலிக்கும்.
கடந்த ஆகஸ்ட் மாதம், ஒரு பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பின்படி, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, 60 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
மிகப்பெரிய சரிவு
அடுத்த ஆறு மாதங்களில், வேறு எந்த மாநிலத்திலும், எந்த முதல்வர்களும் சந்தித்திராத வகையில், தமிழக முதல்வருக்கு, 16 சதவீதம் 'இமேஜ்' சரிவு ஏற்பட்டு உள்ளது.
இதனால், தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த தேர்தலின் போது, 20 சதவீதத்துக்கு கீழே குறைந்து விடும்.
இதற்கெல்லாம் காரணம், பொது இடத்தில் அமைச்சர்களின் செயல்பாடு தான்.
மிகப்பெரிய சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பது, அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் என்ன செய்தாலும், ஈரோடு இடைத்தேர்தல் முடிவு, மிகப் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.