ஓசூர்:ஓசூரில், உறவினர் வீட்டு பெண்ணை காதலித்த வாலிபரை கொலை செய்து, சடலத்தை கர்நாடகாவில் வீசிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகா மாநிலம், கனகபுரா மாவட்டம், கங்கிலிபுறா பகுதியை சேர்ந்தவர் கலிமுல்லா என்பவர் மகன் சல்மான் கான், 23; வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி.
இவர் தந்தை இறந்ததால், ஓசூர் ராம்நகரிலுள்ள உறவினர் வீட்டில் வளர்ந்து வந்தார். அந்த வீட்டிலிருந்த, 17 வயது சிறுமியை சல்மான் கான் காதலித்தார்.
அந்த சிறுமியும் காதலை ஏற்ற நிலையில், சிறுமியின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்ததை அறிந்த சல்மான் கான், சிறுமியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, திருமணத்தை தடுத்தார்.
இது குறித்து, சிறுமியின் பெற்றோர் புகார்படி, ஓசூர் அனைத்து மகளிர் போலீசார், சல்மான் கானை அழைத்து எச்சரித்து அனுப்பினர்.
கடந்த மாதம், 10ல் சல்மான் கான் மாயமானார். இது குறித்து, அவர் தாய் ஹதாஜிபானு, 46, கடந்த மாதம், 26ல் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.
விசாரணையில், சல்மான் கானை காரில் கடத்திச் சென்று, கர்நாடகா மாநிலம் தாவணகரே பகுதியில் கொலை செய்து, கல்லை கட்டி, ஆற்றில் வீசியது தெரிந்தது.
கடந்த, 27ல் கர்நாடகாமாநில போலீசார் சடலத்தை மீட்டனர்.
ஓசூர் டவுன் போலீசார் கொலை வழக்குப்பதிந்து, ராம்நகரை சேர்ந்த ஜான்பாஷா, 36, முகமது அலி, 28, வாஜித், 25, சாதிக், 45, ஆகிய நால்வரை கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர்.
இந்நிலையில், ஓசூரை சேர்ந்த ஸ்ரீகாந்த், 36, தர்மபுரி மாவட்டம், திருப்பாச்சிபுரத்தை சேர்ந்த கமலேசன், 28, ஆகிய இருவர், சேலம் ஜே.எம்., 4 நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரணடைந்தனர்.
அவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.