பாலக்காடு, வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 65 லட்சம் மதிப்புடைய சிகரெட், மொபைல் போன், தங்க கட்டிகளை, ரயில்வே பாதுகாப்பு படையினர், பாலக்காட்டில் பறிமுதல் செய்தனர்.
ரயில்வே பாதுகாப்பு படை கமாண்டர் அனில் நாயர் தலைமையில் பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
கோவையில் இருந்து வந்த வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை சோதனையிட்டபோது, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில், 65 லட்சம் ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அது மட்டுமின்றி, 25 மொபைல் போன், 60 கிராம் எடையுள்ள தங்க கட்டி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக, ரயிலில் பயணித்த காசர்கோட்டை சேர்ந்த ஹசைனார், 54, ஷபீர், 35, ஜாபிர், 36, அப்துல் ரஹ்மான், 41, அலாவுதீன், 38, கோழிக்கோடு நஜிமுதீன், 34, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள், துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வழியாக கள்ளக்கடத்தலில் ஈடுபடுவது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களையும், பொருட்களையும் சுங்கத்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர்.