திருச்சி:மணப்பாறையில் 'டூ- - வீலர் ஸ்டாண்ட்' ஏலத்தில், சிண்டிகேட் அமைத்து, குறைந்த தொகைக்கு எடுத்து, பின் வெளியே, 30 லட்சம் ரூபாய் அதிகமாக ஏலம் விடப்பட்டதாக, இந்திய கம்யூ., பெண் கவுன்சிலர் புகார்அளித்தார்.
குத்தகை
திருச்சி மாவட்டம், மணப்பாறை பஸ் ஸ்டாண்டில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான டூ - -வீலர் ஸ்டாண்ட் ஏலம் நடந்தது.
நகராட்சி அலுவலகத்தில் நடந்த ஏலத்தில், நகராட்சி கவுன்சிலர்கள் சிலரும், அ.தி.மு.க., நிர்வாகியும் இணைந்து, ஏலம் எடுக்க பணம் செலுத்தியவர்களிடம் பேசி, சிண்டிகேட் அமைத்தனர்.
தொடர்ந்து நடந்த ஏலத்தில், பெரியசாமி என்பவருக்கு, 9.10 லட்சம் ரூபாய்க்கு, குத்தகைக்கு விடப்பட்டது.
பின் நகராட்சி அலுவலக வளாகத்திலேயே நடந்த வெளி ஏலத்தில், 39.10 லட்சம் ரூபாய்க்கு குத்தகை முடிவு செய்யப்பட்டது.
இதில், 9.10 லட்சம் ரூபாய் நகராட்சிக்கு செலுத்தப்பட்டு, மீதித்தொகையான, 30 லட்சம் ரூபாய், வெளி ஏலத்தை நடத்தியவர்கள், பதவிக்கு தகுந்தாற்போல பிரித்துக் கொண்டனர்.
நடவடிக்கை
நகராட்சிக்கு வருவாயாக வரக்கூடிய, 30 லட்சம் ரூபாய் இழப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
இந்நிலையில், மணப்பாறை நகராட்சி 20வது வார்டு இந்திய கம்யூ., கவுன்சிலர் மனோன்மணி, நகராட்சி கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது:
'டூ - -வீலர் ஸ்டாண்ட்' ஏலத்தில் எடுத்து, வெளிஏலம் விட்டு முறைகேடு செய்துள்ளனர். அதனால், நகராட்சிக்கு, 30 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த ஏலத்தை ரத்து செய்து, மீண்டும் வெளிப்படையாக மறு ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
இப்பிரச்னையை முன்னிறுத்தி, தி.மு.க.,வைத் தவிர, மற்ற அரசியல் கட்சியினர் போராட்டங்கள் நடத்த தயாராகி வருகின்றனர்.