மூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டு அருகே, தொடர் கொள்ளையில் ஈடுபட்ட பெண் உட்பட மூவரை போலீசார் கைது செய்து, 35 சவரன் நகைகளை மீட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் உட்கோட்ட கிராமங்களில் மர்ம நபர்கள், கார் மற்றும் பைக்கில் சென்று, வீடுகள் மற்றும் 'டாஸ்மாக்' கடைகளில் கொள்ளை அடித்து வந்தனர்.
கொள்ளையர்களை பிடிக்க, எஸ்.பி., மோகன்ராஜ் உத்தரவுப்படி, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். நேற்று முன்தினம் புதுார் கூட்ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியே 'ஹூண்டாய் ஐ 20' காரில் வந்த பெண் உட்பட மூன்று பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர்.
தீவிர விசாரணையில், அவர்கள் சென்னை, பெரம்பூர் கோபி மகன் கார்த்திக், 19; எருக்கஞ்சேரி ராஜசேகர் மகன் பாலாஜி, 23; யுவராஜ் மனைவி சிந்து, 23, என்பது தெரிந்தது.
மூவரும் தேவபாண்டலம் மற்றும் பகண்டை கூட்ரோட்டில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, ரிஷிவந்தியம், வடபொன்பரப்பி போன்ற பல பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடியுள்ளனர்.
மேலும், கனகனந்தல் டாஸ்மாக் கடையை உடைத்து, மது பாட்டில்களை திருடியுள்ளனர்.
இதையடுத்து, கார்த்திக் உட்பட மூவரையும் வடபொன்பரப்பி போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 35 சவரன் நகைகளை கைப்பற்றினர்.
மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.