எஸ்.பி.ஜெயப்பிரகாசம், கவுரவ ஆலோசகர், தமிழக உணவு பொருள் வியாபாரிகள் சங்கம்: மக்கள் மற்றும் வணிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டிருந்த, தனிநபர் வருமான உச்சவரம்பு உயர்வு; அனைத்து துறைகளையும் ஊக்குவிக்கும் விதமாக, பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்து, நம் நாடு முன்னேற்ற பாதையில் செல்வதற்கான, சிறப்பான பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
கூட்டு நிறுவனங்களுக்கு தற்போது, 'சர்சார்ஜ்' உடன், 31.20 சதவீதம் வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதை, 20 சதவீதமாக குறைக்க வேண்டும். சிறுதானிய உற்பத்தியில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற முடிவு செய்ததை வரவேற்கிறோம்.
டி.ஆர்.கேசவன், தலைவர், சென்னை தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு: பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ள ஏழு முன்னுரிமைகள் பொருளாதாரத்தை முழுதுமாக உள்ளடக்கியது. விவசாயம், உற்பத்தி, உள்கட்டமைப்பு ஆகியவற்றிற்கு கவனம் செலுத்தியது வரவேற்கத்தக்கது.
வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தியது, கிராமங்களில் சேமிப்பு கிடங்கு கட்டமைப்புகளை ஏற்படுத்துவது, கூட்டுறவு துறைக்கான முக்கியத்துவம் உள்ளிட்டவை பொருளதாரத்திற்கு உத்வேகத்தை அளிக்கும். வேலைவாய்ப்பை உருவாக்கும் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
கட்டுமான வளர்ச்சி
சிவகுருநாதன், தலைவர், இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான 'கிரெடாய்' சென்னை பிரிவு: பிரதமரின் வீட்டுவசதி திட்டத்துக்கு, 79 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், குறைந்த வருவாய் பிரிவினர் வீடு பெற வாய்ப்பு கிடைக்கும். தேசிய வீட்டுவசதி வங்கி வாயிலாக உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது மிக முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளது. இதனால், இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் கட்டுமான பணிகள் வளர்ச்சி பெறும்.