மத்திய பட்ஜெட்டில், வெளியுறவுத்துறைக்கு 18 ஆயிரத்து 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 17 ஆயிரத்து 250 கோடி ரூபாயை விட இந்த ஆண்டு 4.64 சதவீத நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், 5,408 கோடி ரூபாய் பல்வேறு நாடுகளின் வளர்ச்சிக்கு உதவித் தொகையாக அளிக்கப்பட உள்ளது. நம் நாட்டில் நடக்கவுள்ள, 'ஜி - 20' நிகழ்ச்சிகளுக்கு 990 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளுக்கு அளிக்கப்பட உள்ள உதவித் தொகையில், தெற்காசிய நாடான பூடானுக்கு அதிகப்படியாக 2,400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது அண்டை நாடுகளுக்கான வளர்ச்சித் திட்ட நிதியில், 41.04 சதவீதம்.
தெற்காசிய நாடான மாலத்தீவின் வளர்ச்சிக்கு 400 கோடி ரூபாயும், ஆப்கானிஸ்தானுக்கு 200 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அண்டை நாடான நேபாளத்துக்கு 550 கோடி ரூபாயும், மொரீஷியஸ் நாட்டுக்கு 460 கோடி ரூபாயும், மியான்மருக்கு 400 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவுவதற்காக, 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.