மதுரை:மதுரையில், 6 லட்சம் ரூபாய் கடனை திருப்பி தராததாலும், மனைவியுடன் 'நட்புடன்' இருந்ததாலும், கூலிப்படையை ஏவி, நகைக்கடை உரிமையாளரை கொலை செய்த போலீஸ் ஏட்டு உட்பட எட்டு பேரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைதுசெய்தனர்.
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 42; சோலையழகுபுரத்தில் நகைக்கடை வைத்திருந்தார்.
தகராறு
அவரின் கடை அருகில் ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு கடையை பூட்டி மணிகண்டன் புறப்பட்ட போது, அங்கு வந்த சிலர் தகராறில் ஈடுபட்டு கத்தி, வாளால் அவரை வெட்டி தப்பினர்.
அரசு மருத்துவமனைக்கு துாக்கி செல்லும் வழியில் மணிகண்டன் இறந்தார்.
இக்கொலை வழக்கில் திருச்செந்துார் அடைக்கலபுரம் 'மாடு' தினேஷ், 27, ஜெய்ஹிந்த்புரம் 'குட்டை' அஜீத், 25, அய்யப்பன், 26, 'பல்லு' கார்த்திக், 26, புறா பாண்டி, 26, 'பூச்சி' முத்துபாண்டி, 25, 'இருட்டு' மணி, 26, ஆகியோரை இன்ஸ்பெக்டர் கதிர்வேல் கைது செய்தார்.
இவர்களை கூலிப்படையாக பயன்படுத்தி, கொலை செய்ததாக ஜெய்ஹிந்த்புரம் குற்றப்பிரிவு ஏட்டு ஹரிஹரபாபுவும், 42, கைது செய்யப்பட்டார்.
போலீசார் கூறியதாவது:
ஊமச்சிக்குளத்தைச் சேர்ந்த ஹரிஹரபாபு, ஜெய்ஹிந்த்புரம் ஸ்டேஷனில் நீதிமன்ற வழக்குகளை கண்காணிக்கும் ஏட்டாக உள்ளார். அவ்வப்போது மனைவியுடன் சென்று மணிகண்டன் கடையில் நகைகள் வாங்குவது வழக்கம்.
'சஸ்பெண்ட்'
நாளடைவில் நட்பு பலமானது. தொழில் வளர்ச்சிக்காக மணிகண்டனுக்கு ஹரிஹரபாபு
6 லட்சம் ரூபாய் கொடுத்தார்.
இச்சூழலில் மணிகண்டனுக்கும், ஹரிஹரபாபுவின் மனைவிக்கும் இடையே 'தொடர்பு' ஏற்பட்டது.
அதை அறிந்த ஏட்டு, இருவரையும் கண்டித்தார்; கொடுத்த பணத்தை வட்டியுடன் திருப்பித்தருமாறு கேட்டார்; மணிகண்டன் பொருட்படுத்தவில்லை.
இதனால் அவரை 'தட்டி' வைக்க வேண்டும் எனக் கருதி, நீதிமன்றத்தில் பழக்கமான திருச்செந்துார் 'மாடு' தினேஷ், அவரது கூட்டாளிகளுடன் ஹரிஹரபாபு ஆலோசித்தார்.
'மணிகண்டனின் கை, கால்களை உடைத்தால் 50 ஆயிரம் ரூபாய் தருகிறேன். ஆளையே முடித்தால் 4 லட்சம் ரூபாய் தருகிறேன்' என உறுதியளித்து, 'அட்வான்ஸ்' கொடுத்தார்.
அதை தொடர்ந்து, திட்டமிட்டப்படி மணிகண்டனை, கூலிப்படையினர் வெட்டிக்கொலை செய்தனர்.
அவர்களில் சிலரை பிடித்து விசாரித்த போது தான் ஏட்டுக்கு, இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரிந்தது. அவர் உட்பட எட்டு பேரையும் கைது செய்துள்ளோம்.
இவ்வாறு கூறினர்.
போலீஸ் ஏட்டுவே கூலிப்படையை ஏவி கொலை செய்தது சக போலீசாரையும், அதிகாரிகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஹரிஹரபாபு மீது 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.