மதுரை:திருச்சி, தஞ்சாவூர் கல்லணையில் மணல் குவாரிக்கு விதித்த தடை உத்தரவை மாற்றியமைத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டி குவாரி நடத்தக்கூடாது என நிபந்தனை விதித்து உத்தரவிட்டது.
சட்ட விரோதம்
திருச்சி மங்கம்மாள்புரம் கொள்ளிடம் ஆறு பாதுகாப்பு நலச் சங்கம் தலைவர் சண்முகம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூகூர், தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் அருகே திருச்சினம்பூண்டி கல்லணையில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுகிறது.
இதனால் விவசாயம் மட்டுமன்றி கடலுார் வீராணம் திட்டம் குடிநீர் ஆதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும். மழைக்காலத்தில் வெள்ளம் வந்தால் அருகிலுள்ள கிராமங்கள் இழப்பை சந்திக்க நேரிடும்.
மன்னன் கரிகாலன் நமக்கு தந்த அற்புதம் கல்லணை. அதை இழந்தால் மீண்டும் நம்மால் உருவாக்க முடியாது. கல்லணையின் கூகூர், திருச்சினம்பூண்டி பகுதியில் மணல் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும்.
கல்லணையின் கிழக்கு, மேற்கு பகுதியில் 15 கி.மீ.,க்கு மணல் குவாரிக்கு அனுமதியளிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
ஜன., 4ல் நீதிபதிகள் அமர்வு கல்லணையில் மணல் குவாரிக்கு இடைக்கால தடை விதித்தது.
திருச்சி அபிஷேகபுரம் பாரதிமோகன், 'திருச்சி, தஞ்சாவூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதில் விதிமீறல் உள்ளது. தடை விதிக்க வேண்டும். குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்' என்று மனு செய்தார்.
கல்லணையில் மணல் குவாரிக்கு விதித்த தடையை நீக்கக்கோரி, தஞ்சாவூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மனு செய்தார்.
ஆவணங்கள் தாக்கல்
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:
இந்த நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவு மாற்றி அமைக்கப்படுகிறது.
கல்லணையில் அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டி குவாரி நடத்தக்கூடாது.
காலை 7:00 முதல் மாலை 5:00 மணி வரை குவாரி நடத்தலாம். இதை 'ட்ரோன்' மூலம் கண்காணிக்க வேண்டும்.
மனுதாரர் மாவட்ட அளவிலான உயர்நிலைக் குழுவிடம் ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த குழு கல்லணையில் ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறல் இருந்தால் வரும் 16ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.