தஞ்சாவூர்:மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டதால், டெல்டாவில், 2 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்படும் என கூறி, கூடுதலாக 15 நாட்கள் தண்ணீரை திறக்க வலியுறுத்தி, விவசாயிகள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
மேட்டூர் அணையில் இருந்து, பாசனத்திற்காக, ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு, ஜனவரி 28ம் தேதி மூடப்படும்.
கடந்த ஆண்டு, மேட்டூர் அணையில் இருந்து மே 24ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது.
இதன் மூலம் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இலக்கை விஞ்சி, 4.72 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
அதே போல, சம்பா, தாளடி பருவத்தில், 10.69 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, 20 சதவீதம் அறுவடைப் பணிகள் முடிந்துள்ளன.
இந்நிலையில், மேட்டூர் அணையின் தண்ணீர் திறப்பு, கடந்த 28ம் தேதி நிறுத்தப்பட்டது.
இதனால், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், சீர்காழி பகுதியில் சம்பா, தாளடி சாகுபடி தொடர் மழையால் பாதிக்கப்பட்டதால், நவம்பர் - டிசம்பரில் விவசாயிகள் மறு சாகுபடி செய்தனர்.
இப்பயிர்கள் மார்ச் முதல் வாரத்தில் தான் அறுவடைக்கு தயாராகும் நிலையில் உள்ளன.
மேட்டூரில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால், 2 லட்சம் ஏக்கரில், இளம் நெற் பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது.
எனவே, கூடுதலாக 15 நாட்களுக்கு, மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் பகுதியில், கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாவட்டச் செயலர் கண்ணன் தலைமையில், நுாற்றுக்கணக்கான விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கல்லணை கால்வாய் கோட்ட உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், பூதலுார் தாசில்தார் பெர்சியா, விவசாயிகளிடம் பேச்சு நடத்தி, கலெக்டரிடம் பேசி, உரிய முடிவெடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதன் பின், விவசாயிகள் மறியலை கைவிட்டனர். இதனால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.