சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், உடைகுளம் கிராவல் குவாரியில் இருந்தவர்கள் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீவைத்து மர்ம நபர்கள் வீசினர்.
சிவகங்கை அருகே உடைகுளத்தில் அரசு அனுமதியுடன் தனியார் இடத்தில் கிராவல் குவாரி செயல்படுகிறது. இதில், 4 க்கும் மேற்பட்ட மண்அள்ளும் இயந்திரங்கள் மூலம் கிராவல் மண்ணை டிப்பர் லாரிகளில் எடுத்து விற்கின்றனர். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு கிராவல் மண் குவாரியில் மண் அள்ளும் இயந்திர ஆப்பரேட்டர் ராகினிபட்டி சதாசிவம் மகன் பாரதிராஜா 43, மற்றும் ஆப்பரேட்டர் பாலமுருகன் 19, உதவியாளர் கண்ணன் 18, மற்றொரு ஊழியர் சத்தியராஜ் 21, ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
அப்போது இரண்டு டூவீலரில் வந்த 4 பேர் குண்டூசிகள் நிரப்பிய பெட்ரோல் பாட்டிலை தீ வைத்து வீசினர். எங்களை எதிர்த்தா கிராவல் குவாரி நடத்துகிறீர்கள் எனக்கூறி சென்றனர். பெட்ரோல் நிரப்பிய பாட்டில் மண் அள்ளும் இயந்திரத்தில் விழுந்து வெடித்து சிதறியது. சிலருக்கு தீக்காயம் ஏற்பட்டது. வீசியவர்கள் தப்பி சென்றனர். சிவகங்கை தாலுகா ஸ்டேஷனில் பாரதிராஜா புகார் அளித்தார்.
விருதுநகர் தடய அறிவியல் நிபுணர்கள் வெடித்த இடத்தில் கிடைத்த ஆதாரங்களை பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். சிவகங்கை டி.எஸ்.பி., சிபிசாய் சவுந்தர்யன், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் விசாரிக்கின்றனர்.
குவாரி நடத்தியதில் முன்விரோதம்
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கிராவல் குவாரியை 5 பேர் கொண்ட நண்பர்கள் நடத்தி வந்தனர். இதில் பணம் பாக்கி தரவேண்டியது தொடர்பாக நண்பர்களுக்குள் விரோதம் ஏற்பட்டது. இதனால் ஒரு நபர் மட்டுமே கிராவல் குவாரியை நடத்தினார். இந்த ஆத்திரத்தில் பாதிக்கப்பட்ட நண்பர்கள் சிலர் கூலியாட்களை வைத்து பெட்ரோல் குண்டு' வீசியது தெரியவந்துள்ளது.