தற்சார்பு இந்தியாவை உருவாக்கும்!
அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் தற்சார்பு இந்தியாவை உருவாக்கக்கூடியதாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. உறுதியான உட்கட்டமைப்பு மற்றும் உறுதியான பொருளாதாரத்துடன் கூடிய புதிய இந்தியாவை உருவாக்கும் பிரதமர் மோடியின் கனவை பிரதிபலிக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
அனைத்து தரப்புக்குமானது!
விவசாயிகள், பெண்கள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைத்து தரப்பினரின் வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய வகையில் மத்திய அரசின் பட்ஜெட் உள்ளது. நம் நாடு, 400 லட்சம் கோடி ரூபாய் என்ற பொருளாதார இலக்கை நோக்கி நகரவும், உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக விரைவில் எட்டவும் இந்த பட்ஜெட் உதவும்.
-ராஜ்நாத் சிங், ராணுவ அமைச்சர், பா.ஜ.,
புதிய இந்தியா உருவாக அடித்தளம்!
கல்வி, திறன் மேம்பாடு வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் மத்திய அரசின் பட்ஜெட் முக்கியத்துவம் அளித்துள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த, அறிவு சார்ந்த பொருளாதாரம் அமையவும், புதிய இந்தியா உருவாகவும் இந்த பட்ஜெட் அடித்தளமிட்டுள்ளது.
தர்மேந்திர பிரதான், மத்திய கல்வி அமைச்சர், பா.ஜ.,
பொருளாதார மந்தநிலையை தோற்கடிக்கும்!
சர்வதேச பொருளாதார மந்தநிலையை தோற்கடிக்கும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் உள்ளது. இது வெறும் பட்ஜெட் மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் அதிகாரமளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனம்.
முக்தர் அப்பாஸ் நக்வி, மூத்த தலைவர், பா.ஜ.,
தொலைநோக்குடன் கூடிய பட்ஜெட்!
மத்திய பட்ஜெட், நிலையான மற்றும் தொலைநோக்குடன் கூடியதாக உள்ளது. உலக பொருளாதாரத்தில், இந்தியாவை தொடர்ந்து ஒளிரச் செய்யக்கூடியதாக விளங்குகிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், திறன் மேம்பாட்டை அதிகரிக்கவும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜெயந்த் சின்ஹா, மூத்த தலைவர், பா.ஜ.,
நாட்டின் ஜி.டி.பி., உயரும்!
மத்திய அரசின் பட்ஜெட்டில் வரி சீர்திருத்தம் செய்திருப்பதன் வாயிலாக, நடுத்தர மக்களின் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். இதன் வாயிலாக நுகர்வோர் சந்தை வளர்ச்சியடைவதுடன், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது.
சிவ்ராஜ் சிங் சவுகான், மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,
ஆசைகளை நிராசைகளாக்கி உள்ளது
மத்திய அரசின் பட்ஜெட், நாட்டு மக்களின் ஆசைகளை, நிராசையாக்கி உள்ளது. இது, நம் நாட்டின் பணவீக்கத்தையும், வேலைவாய்ப்பின்மையையும் அதிகரிக்கச் செய்யும். இந்த பட்ஜெட் பணக்காரர்களுக்கு மட்டுமே நன்மை தரும்.
அகிலேஷ் யாதவ், உ.பி., முன்னாள் முதல்வர், சமாஜ்வாதி
ஏழை மக்களுக்கு எதிரான பட்ஜெட்!
மத்திய அரசின் பட்ஜெட், ஏழை மக்களுக்கு எதிரானது; எதிர்கால நலனை சார்ந்தது அல்ல. இது, நாட்டின் வேலைவாய்ப்பின்மையை போக்க, எவ்வகையிலும் உதவாது. வரும் 2024 லோக்சபா தேர்தலை மனதில் வைத்தே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய ஒளிக்கீற்று கூட தென்படாத நிலையில், இது ஒரு இருண்ட பட்ஜெட்.
மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
மாற்றாந்தாயாக செயல்படுகிறது!
மத்திய அரசின் பட்ஜெட் வாயிலாக நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளது. மத்திய அரசுக்கு 1.75 லட்சம் கோடி ரூபாய் வரி செலுத்தும் புது டில்லி மக்களுக்கு, வெறும் 325 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது மாற்றாந்தாய் போக்கையே காட்டுகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால், புதுடில்லி முதல்வர், ஆம் ஆத்மி
வெறும் அறிவிப்பு மட்டுமே!
மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகளோடு மட்டுமே உள்ளது. அது செயலாக்கம் பெறுவது இல்லை. கடந்த பட்ஜெட்டில் விவசாயம், சுகாதாரம், கல்வி போன்ற துறைகளுக்கு அறிவித்த நிதியை விட, இந்த முறை மிக குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜெய்ராம் ரமேஷ், மூத்த தலைவர், காங்.,