வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் நேற்று மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் தலைமையிலான துணை கண்காணிப்புக் குழு ஆய்வு மேற்கொண்டது.
முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்ஷன்ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இக்குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்புக் குழு மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் தலைமையில் உள்ளது.
துணை குழுவில் தமிழக அரசு சார்பில் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள அரசு சார்பில் செயற்பொறியாளர் ஹரிகுமார், உதவி பொறியாளர் பிரசீத் உறுப்பினர்களாக உள்ளனர்.
2022 அக். 13ல் அணையின் நீர்மட்டம் 127.55 அடியாக இருந்தபோது இக்குழு ஆய்வு மேற்கொண்டது. தற்போது நீர்மட்டம் 127.75 அடியாக உள்ள நிலையில் (மொத்த உயரம் 152 அடி) நேற்று அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மெயின் அணை, பேபி அணை, ஷட்டர், நீர்க்கசிவு காலரி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டது.
கடந்த சில நாட்களாக அணையில் நடந்துவரும் வர்ண பூச்சு பணியை பார்வையிட்டனர். அணையை ஒட்டியுள்ள ஷட்டர்களின் இயக்கம் சரியாக உள்ளதா என இயக்கி பார்க்கப்பட்டது. மாலையில் குமுளி 1-ம் மைலில் உள்ள பெரியாறு அணை கட்டுப்பாடு அலுவலகத்தில் இக்குழுவின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. ஆய்வு தொடர்பான அறிக்கையை குல்ஷன்ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழுவினருக்கு இக்குழு அனுப்பி வைக்கும்.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்திற்கு ஏற்ப கசிவுநீர் இருக்க வேண்டும். 2022 அக்.13ல் நீர்மட்டம் 127.55 அடியாக இருந்தபோது கசிவுநீர் ஒரு நிமிடத்திற்கு 60.245 லிட்டராக இருந்தது. நேற்று நீர்மட்டம் 127.75 அடியாக இருந்த நிலையில் ஒரு நிமிடத்திற்கு 60.275 லிட்டராக இருந்தது. நீர்மட்டத்தின் உயரத்திற்கு ஏற்ப இது சரியான அளவாகும் எனவும், அதனால் அணை பலமாக உள்ளது எனவும் துணைக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.