'மஹிளா சம்மான்' சேமிப்பு பத்திரத்தின் வாயிலாக, ஒருமுறை புதிய சிறுசேமிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமியருக்கான டெபாசிட் வசதி, இரண்டு ஆண்டுகளுக்கு 7.5 சதவீத நிலையான வட்டி விகிதத்தில் இருக்கும் இந்த திட்டத்தில், அதிகபட்ச வைப்புத் தொகை, 2 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பகுதியளவு திரும்பப் பெறும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
'தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா' எனப்படும் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, கிராமப்புற பெண்களைத் திரட்டி, 81 லட்சம் சுயஉதவி குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
பல ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட பெரிய உற்பத்தி நிறுவனங்களை உருவாக்குவதன் வாயிலாக, இந்த குழுக்கள், அடுத்த கட்ட பொருளாதார வலுவூட்டலை அடைய உதவ முடியும்.
பிரதமர் - கிசான் சம்மான் நிதியின் கீழ், சிறு விவசாயிகளுக்கு 2.25 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, மூன்று கோடி பெண் விவசாயிகளுக்கு 54 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கு
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான அதிகபட்ச வைப்புத்தொகை வரம்பு, 15 லட்சம் ரூபாயில் இருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாத வருமான கணக்கு திட்டத்துக்கான அதிகபட்ச டெபாசிட் வரம்பு, ஒற்றை கணக்கிற்கு 4.5 லட்சம் ரூபாயில் இருந்து 9 லட்சம் ரூபாயாகவும், கூட்டுக் கணக்கிற்கு 9 லட்சத ரூபாயில் இருந்து 15 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.