திருப்பூர்:திருப்பூர் அருகே வட மாநிலத்தினர் திரண்ட மற்றொரு வீடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் பி.என்., ரோடு கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சம்பத், 45; பனியன் தொழிலாளி.
ஜனவரி 29ம் தேதி இரவு, 8:00 மணிக்கு டியூஷனுக்கு சென்ற மகளை அழைத்து வர, நியூ திருப்பூரில் இருந்து பொங்குபாளையத்திற்கு செல்ல 'டூ-வீலரில்' பரமசிவம்பாளையம் வழியாக சென்று கொண்டிருந்தார்.
ரோட்டில் நின்றிருந்த வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் மீது எதிர்பாராத விதமாக அவரின் இரு சக்கர வாகனம் மோதியது. அதில், அவருக்கு காயம் ஏற்படவில்லை; வட மாநிலத்து இளைஞர் கையில் வைத்திருந்த மொபைல் போன் மட்டும் கீழே விழுந்து சேதமானது.
இதையடுத்து, வட மாநில வாலிபரிடம் சம்பத் மன்னிப்பு கேட்டார். மொபைல்போன் சேதத்துக்கு, 200 ரூபாய் கொடுத்தார். எனினும், கூடுதல் பணம் கேட்டதால், 500 ரூபாய் கொடுத்தார்.
உடனே, அங்கிருந்த வட மாநிலத்தவர் திரண்டனர். கூடுதலாக பணத்தை கேட்டு மிரட்ட ஆரம்பித்த அவர்கள், சம்பத்தின் இரு சக்கர வாகனத்தை பறித்து வைத்து கொண்டனர்; அவர் பலமுறை கேட்டும் தர மறுத்து விட்டனர்.
'மகளை அழைத்து வந்து விட்டு வருகிறேன். வேண்டுமானால், நீயும் கூட வா...' என்று வட மாநில வாலிபரிடம் சம்பத் கேட்டும், வாலிபர் விடவில்லை.
பின், தனக்கு தெரிந்த வேறொரு நபர் வந்ததும், 'டூவீலர் இங்கே இருக்கட்டும்' என்று கூறி, கிளம்பி சென்றார்.
தகவலறிந்து சென்ற பெருமாநல்லுார் போலீசார் மறுநாள் விசாரித்தனர். சம்பத் தரப்பில் புகார் கொடுக்க முன்வரவில்லை.
வீடியோ வைரல்
கடந்த நான்கு நாள் முன் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஏற்கனவே, திருப்பூர், அனுப்பர்பாளையம், திலகர் நகரில் வட மாநிலத்தினர் விரட்டும் வீடியோ பரவிய பின், இருவரை போலீசார் கைது செய்தனர். தற்போது, இந்த வீடியோவும் பரவி வருகிறது.
திருப்பூர் எஸ்.பி., சஷாங் சாயிடம் கேட்டதற்கு, ''டூவீலரில் வந்த நபர் புகார் அளிக்க முன்வரவில்லை. இருந்தாலும், விசாரித்து வருகிறோம்,'' என்றார்.