சென்னை:நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில், போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில், சி.பி.சி.ஐ.டி., விசாரணை குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. விசாரணையில் முன்னேற்றம் காட்ட, கடைசி வாய்ப்பும் வழங்கி உள்ளது.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்காக, ஸ்ரீபெரும்புதுார் அருகில் உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும்போது, போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு, 20.52 கோடி ரூபாய் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில், ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அப்போது மாவட்ட வருவாய் அதிகாரியாக இருந்த நர்மதா ஆஜராக உத்தரவிட்டது; நில உரிமையாளர்களுக்கு, 190 கோடி ரூபாய் வழங்கியதன் அடிப்படை குறித்து, விரிவான அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, இவ்வழக்கு, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது. முன்னாள் மாவட்ட வருவாய் அதிகாரியும், தற்போது, மதுரையில் ஒழுங்கு நடவடிக்கைக்கான தீர்ப்பாயத்தின் கமிஷனராகவும் உள்ள நர்மதா, நேரில் ஆஜரானார். விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில், இந்த விவகாரத்தில், காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி.,யும் விசாரணை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதை பரிசீலித்த நீதிபதி சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:
பிரச்னையின் தீவிரம் கருதி, சி.பி.சி.ஐ.டி., வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. இருந்தும், புலன்விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், பாராட்டத்தகுந்த விதத்தில் இல்லை.
முன்னாள் மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா, விசாரிக்கப்பட வேண்டியவர்களில் முக்கியமானவர் என்றும், அவர் எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதே அதிகாரி, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக, இரண்டு வாரங்களில், இதே நீதிமன்றத்தில் மூன்று முறையாவது ஆஜராகி இருப்பார்.
அப்படி இருக்கும்போது, அவரது இருப்பிடத்தை எப்படி அடையாளம் காண முடியவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
மெத்தனமாக சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள் பணி செய்கின்றனர் என்பதற்கு, இது ஒரு உதாரணம்.
நத்தை வேகத்தில் இப்படி விசாரணை நடந்தால், சி.பி.சி.ஐ.டி., மீது நம்பிக்கை போய் விடும். சி.பி.ஐ.,க்கு விசாரணையை மாற்றவும் நீதிமன்றம் தயங்காது. எனவே, புலன்விசாரணையில் முன்னேற்றத்தை காட்டுவதற்கு, கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படுகிறது.
விசாரணை முன்னேற்றம் குறித்து, அறிக்கை அளிக்க வேண்டும். அதன்பின், அடுத்த நடவடிக்கை பற்றி முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விசாரணையை, வரும் 13க்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.