நாகப்பட்டினம்:கோடியக்கரை அருகே படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த ஐந்து மீனவர்களை மற்ற மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே புஷ்பவனத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 45. இவருக்கு சொந்தமான 'பைபர்' படகில், பன்னீர்செல்வம் உட்பட ஐந்து மீனவர்கள் நேற்று முன்தினம் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.
வானிலை மையம் எச்சரிக்கை காரணமாக கரைக்கு திரும்பினர். நேற்று முன்தினம் இரவு கோடியக்கரை அருகே ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது.
படகை பிடித்துக் கொண்டு ஐந்து மீனவர்களும் தத்தளித்தனர். அவ்வழியே சென்ற வேறு பகுதி மீனவர்கள், தத்தளித்த மீனவர்களை காப்பாற்றி, கிராமத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அப்பகுதிக்கு விரைந்து சென்ற மணியன் தீவு மீனவர்கள், கடலில் கவிழ்ந்த படகு மற்றும் மீனவர்களை மீட்டு நேற்று கரைக்கு அழைத்து வந்தனர்.
சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் விசாரிக்கின்றனர்.