பழநி கோயிலில் கும்பாபிஷேகம் நடப்பதற்கு முதல் நாள் கருவறைக்குள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நுழைந்து சாமி தரிசனம் செய்தது சர்ச்சையாகியுள்ளது.
பழநி கோவில் இணை ஆணையர் நடராஜன் 'யாகசாலை பூஜை துவங்கிய நாளில் இருந்து கும்பாபிஷேகம் நடப்பதற்கு முதல் நாள் வரை யாரும் கோவில் கருவறைக்குள் நுழையக் கூடாது என உத்தரவிட்டு இருந்தார்.
'அதை மீறி செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் புகார்அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
பழநியில் இருக்கும் மூலவர் முருகன் கற்சிலை அல்ல; நவபாஷாணம் என்ற மூலிகை மருந்து பொருட்களால் ஆனவர்.
இந்த கோவிலில் ஜன. 27ல் மூலவர் அமைந்திருக்கும் சன்னிதிக்கும் முதல் நாள் அங்கேயே இருக்கும் உப சன்னிதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்த நாள் குறித்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அதை கண்டுகொள்ளவில்லை. தட்சிணாயன காலமான மார்கழி மாதத்தில்முகூர்த்த கால் நட்டு கும்பாபிஷேக பணியை துவக்கினார். அதாவது சுபமுகூர்த்த நாள் என்று கூறி டிச. 25ல்முகூர்த்த கால் நட்டனர்; அன்று கிறிஸ்துமஸ் தினம்.
பழநி கோவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என சில மாதங்களுக்கு முன் பேச்சு துவங்கிய போது மூலவர் முருகன் சிலை ஸ்திரத்தன்மையோடு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய முடிவு எடுத்தனர்.
இதற்காக அக்டோபரில் ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையில் 15 பேர் குழு அமைக்கப்பட்டது. அதில் ஆன்மிகவாதிகள்ஸ்தபதிகள்ஆகம விதிகள் அறிந்த வல்லுனர்கள்மக்கள் பிரதிநிதிகள் இடம் பெற்றனர்.
இந்த குழு கடந்த டிச. 9ல் மூலவர் சிலையை ஆய்வு செய்தது. ஐ.ஐ.டி. வல்லுனர்கள் மூவரும் அழைத்து வரப்பட்டனர். முருகன் சிலை குறித்த ஆய்வு அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என கூறினர்.
ஆனால் அந்த குழு அறிக்கை அளிப்பதற்கு முன்பாகவே கும்பாபிஷேகம் நடத்தி முடித்து விட்டனர். அதிலும் ஏகப்பட்ட விதிமீறல்கள் நடந்துள்ளன.
'ஜன. 23ல் துவங்கி ஜன. 26 வரை மூலவர் இருக்கும் கருவறைக்குள் யாரும் நுழைய கூடாது. யாகசாலையில் எழுந்தருளியிருக்கும் முருகனை தான் வழிபட வேண்டும்' என கோவில் இணை ஆணையர் நடராஜன் பிறப்பித்த உத்தரவை மீறி அமைச்சர் சேகர்பாபு நடந்துள்ளார்.
அமைச்சர்கள் சேகர்பாபுஉட்பட20 பேர்; அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர் என 400க்கும் மேற்பட்டோர் ஜன. 26 மாலை மூலவர் முருகன் கருவறைக்குள் சென்றனர்.
'மருந்து சாத்தும் நிகழ்வுக்காகதான் எல்லாரும் உள்ளே சென்றனர்' என்று கூறினாலும் இது அப்பட்டமான ஆகம விதிமீறல்; கோவில் இணை ஆணையர் ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்புக்கு எதிரானது.
கருவறைக்குள் சென்றவர்கள் அங்கிருக்கும் முருகன் சிலையை தொட்டு வணங்கி உள்ளனர். இதற்கான வீடியோ பதிவு உள்ளது. பழநி முருகன் சிலையின் சக்தி குறித்து சொல்ல வேண்டுமானால் ஆய்வு குழுவினர் மூலவர் கருவறைக்குள் சென்று ஆயிரம் 'வாட்ஸ் பல்ப்' எரிய விட்டதும் அது அணைந்து விட்டதாம்.
அதேபோல கருவறைக்குள் வெப்ப நிலையை சோதிப்பதற்காக அதற்கான கருவியை பயன்படுத்த முயற்சித்தபோது கருவி வேலை செய்யவில்லையாம். இப்படி சக்தி வாய்ந்த முருகனோடுதான் அமைச்சர் சேகர்பாபு விளையாடியுள்ளார்.
பொதுவாக கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்களுக்கு எந்த விழாவையும் நடத்த மாட்டார்கள். ஆனால் பழநியில் கும்பாபிஷேகம் முடிந்த கையோடு தைப்பூச திருவிழாவை அறிவித்துள்ளனர். இதுவும் ஆகம விதிமீறல்.
இது அரசுக்கு மட்டுமல்ல நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல. எனவே பழநி முருகன் கோவிலுக்கு ஆகம விதிகள்படி மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
இப்படி தவறுக்கு மேல் தவறு செய்திருக்கும் அமைச்சர் சேகர்பாபு 400 பேருடன் கருவறைக்குள் நுழைந்தது ஏற்று கொள்ள முடியாத நிகழ்வு. அவர்கள் அங்கிருக்கும் மூலவர் முருகனை என்ன செய்தனர் என தெரியவில்லை.
மூலவர் முருகன் அங்கேதான் இருக்கிறாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. அதனால் சிலை தடுப்பு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவில் தரப்பில் கூறப்பட்டதாவது:
பழநி முருகன் கும்பாபிஷேகம் ஆகம விதிகள் அறிந்தோர் நுணுக்கமாக ஆய்ந்து குறித்து கொடுத்த நாளில் நடத்தப்பட்டது; விதிமீறல் எதுவும் இல்லை.
கும்பாபிஷேகம் நடப்பதற்கு முதல் நாள் மூலவர் சன்னிதிக்குள் சென்ற பக்தர்கள் குறித்து பிரச்னை கிளப்புகின்றனர்.
மூலவர் இருக்கும் கருவறைக்குள் யாரும் செல்லவில்லை. கருவறைக்கு முன்னதாக இருக்கும் அர்த்த மண்டபத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இதிலும் எந்த விதிமீறலும் இல்லை.
இவ்வாறு கோவில் தரப்பில் கூறப்படுகிறது.
- நமது நிருபர் --