மாதம் தோறும் ஐந்து அல்லது ஆறு வால்மீன்களை வானவியலாளர்கள் இனம் காண்கிறார்கள். எடுத்துக்காட்டாக 2019ல், 66 வால்மீன்களும்; 2020ல், 73; 2021ல் 105; 2022ல் 76 புத்தம் புது வால்மீன்களும் இனம் காணப்பட்டது.
ஆனால் இவற்றில் பெரும்பாலான வால்மீன்களை ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கி வழியே மட்டுமே காண முடியும்.
வெகு சில மட்டுமே வெறும் கண்களுக்கு தோற்றம் தரும் அளவில் பிரகாசமாகவும் பூமிக்கு அருகாமையில் செல்லும். பத்தில் ஒன்று பழுதில்லை என்பது போல வெறும் கண்களுக்கு புலப்படும் வகையில் பிரகாசமாக வான வேடிக்கை காட்டப் போவது தான், C / 2022 E3 (ZTF) எனப்படும் இந்த பச்சை வால்மீன்.
எங்கே எப்போது எப்படி பார்க்கலாம்
வாராது வந்த மாமணியை போல வெறும் கண்களுக்கு விருந்து படைக்கும் படியாக இந்தப் பச்சை வால்மீனை ஜனவரி இறுதி நாட்கள் முதல் பிப்ரவரி பத்தாம் நாள் வரை காண இயலும்.
இன்று மாலை மயங்கியதும், வடக்கு அடிவானில் இந்த வால்மீன் பிரகாசமாக தென்படும் என, கணிப்பு செய்துள்ளனர். இன்று தான், இந்த வால்மீன் பூமிக்கு அருகாமை நிலையில் சுமார் 42 மில்லியன் கி.மீ., தொலைவில் நிலைகொள்ளும்.அந்த கட்டத்தில், வால்மீனிலிருந்து வெளிப்படும் ஒளி, பூமியை வந்து அடைய சுமார் 2.5 நிமிடங்கள் எடுக்கும். அவ்வளவு அருகமையில் உள்ளபோது வெறும் கண்களுக்கு புலப்படும் அளவில் பிரகாசமாக இருக்கும் என கருதுகிறார்கள்.
வடக்கு அடிவானில் தான், இந்த வால்மீன் தென்படும் என்பதால் துருவ மீனை எளிதில் காணும் படியான இடத்தை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
வடக்கு அடிவானை மறைப்பு செய்யும் மரம் கட்டடம் போன்றவை ஏதுமில்லாத இடமாக அது இருக்கவேண்டும்.
அருகே பிரகாசமான விளக்கு ஒளி இல்லாமல் இருட்டான பகுதியை தேர்வு செய்யவும்.
மேலும் அடிவானில் துாசு தும்பு மற்றும் மேகமறைப்பு வாய்ப்பு கூடுதல் என்பதால், வால்மீன் உதயம் ஆகி வானில் உயரும் வரை காத்திருக்க வேண்டும்.
நடுஇரவில் வானில் உயரே எழும். எனவே இரவு 10:00 - 12:00 மணிக்கு காண முயற்சி செய்யலாம். சிறு பைனாகுலர் போன்ற கருவிகள் வால் போன்ற பகுதிகளை நுணுக்கமாக காண உதவும்.
அடுத்து எங்கே செல்லும்
மார்ச் 2022ல் இனம் காணப்பட்ட இந்த வால்மீன், ஜனவரி 12 அன்று சூரியனுக்கு பின்புறம் வலம் செய்து, தற்போது சூரியனிடமிருந்து விலகி செல்கிறது. அதன் பாதையில் செலும்போது பூமிக்கு நெருக்கமாக வரும் பிப்ரவரி 2 அன்று நிலைகொள்ளும். அதன் பின்னர் மேலும் மேலும் விலகி செல்லும்.
இந்த வால்மீனின் பாதையை, நுணுக்கமாக ஆய்வு செய்த விஞ்ஞானிகள் சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன், பூமியில் கற்கால நாகரிகம் நடப்பில் இருந்த நிலையில் சூரியனுக்கு அருகே வந்து சென்றது என்கிறார்கள்.
தற்போது அதன் வேகம் சூரிய ஈர்ப்பு தளையிலிருந்து விடுபடும் அளவுக்கு உள்ளது.
ஏனைய கோள்களின் ஈர்ப்பின் விளைவாக, இதன் வேகம் மட்டுப்பட வில்லை என்றால், சூரிய மண்டலத்திலிருந்து விலகி விண்மீன்களுக்கு இடையே உள்ள விண்வெளிக்கு சென்று விடும் என கணிப்பு செய்துள்ளனர்.
காலம் தான் இதற்கு விடை சொல்லும்.