சென்னை:நடப்பு நிதி ஆண்டில் 10 மாதங்களில் பத்திரப்பதிவு வாயிலாக 14 ஆயித்து 43 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக சொத்து விற்பனை பத்திரங்கள் பதிவாகின்றன. இதில் முத்திரைத் தீர்வை பதிவு கட்டணம் வாயிலாக அரசுக்கு வருவாய் ஈட்டப்படுகிறது. அரசின் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த இதுவே பிரதான நிதி ஆதாரமாக உள்ளது.
2021- 22ல் பத்திரபதிவு வாயிலாக 14 ஆயிரத்து 325 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் 13 ஆயிரத்து 914 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது.
நடப்பு நிதியாண்டான 2022 - 23ல் 16 ஆயிரத்து 322 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் ஜனவரி இறுதி வரை 10 மாதத்தில் 14 ஆயிரத்து 43 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த நிதி ஆண்டில் 12 மாதங்களில் ஈட்டப்பட்ட 13 ஆயித்து 913 கோடியை விட தற்போது அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதே வேகம் தொடர்ந்தால் மார்ச் மாத இறுதிக்குள் வருவாய் 17 ஆயிரம் கோடி ரூபாயை தாண்ட வாய்ப்புள்ளதாக பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.