மக்களுக்கும், பூமிக்கும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நன்செய் நிலங்களை பாதுகாக்க வலியுறுத்தி பிப். 2ல் உலக நன்செய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'இது நன்செய் நிலங்கள் மீட்டெடுப்பதற்கான நேரம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. அதிகம் நீர் பாய்ச்சி வேளாண்மை செய்யும் நிலங்கள் நன்செய் நிலங்கள் என அழைக்கப்படுகின்றன. நெல், கரும்பு, மஞ்சள், வாழை, வெற்றிலை போன்ற பயிர்கள் இவ்வகை நிலத்தில் பயிரிடப்படுகின்றன. உலகில் 50ஆண்டுகளில் 35 சதவீத ஈர நிலப்பரப்பு அழிந்துள்ளன.
உலகில் 100 கோடி மக்கள் நல்ல குடிநீரைப் பெற இயலாமல் உள்ளனர். அதேப்போல முறையான கழிவறை வசதியில்லாமல் 200 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நன்செய் நிலங்களும், ஆறுகளும் தான் நல்ல நீருக்கும், வாழ்க்கைக்கும் ஆதாரங்கள். ஆனால் அவை இன்று வேகமாக அழிந்து வருகின்றன.
வளரும் நாடுகளில் பல கடுமையான தண்ணீர் பற்றாக் குறையை சந்தித்து வருகின்றன. இதனால் மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே உலகில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட நன்செய் (நெல், கோதுமை போன்ற முக்கிய பயிர் விளைக்கும்) நிலங்கள் அழிந்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இவற்றை மறு சீரமைக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
நன்செய், சதுப்பு நிலங்கள் தான் நீர் ஆதாரங்கள் மற்றும் நீர் பிடிப்புப் பகுதிகள் ஆகும்.