வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
புதுடில்லி: இந்திய விளையாட்டுத் துறைக்கு எப்போதும் இல்லாத வகையில் அதிகபட்சமாக ரூ. 3,397.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டுக்கான (2023-24) பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த ஆண்டு ஆசிய விளையாட்டு, 2024ல் பாரிஸ் ஒலிம்பிக் வரவுள்ளது. இதனால் சர்வதேச அரங்கில் இந்திய நட்சத்திரங்கள் சிறப்பாக செயல்பட உதவும் வகையில் விளையாட்டு துறைக்கு அதிகபட்சமாக ரூ. 3,397.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டை விட ரூ. 334.72 கோடி அதிகம். இதற்கு முன் 2022-23ல் ரூ. 3,062.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. தவிர தொடர்ந்து இரண்டாவது முறையாக ரூ. 3000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டது.

யாருக்கு எவ்வளவு
இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு ரூ. 785.52 கோடி தரப்பட உள்ளது. விளையாட்டு நட்சத்திரங்களுக்கான தேசிய முகாம்கள் நடத்த, தேவையான பொருட்கள் வாங்க, அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த, பயிற்சியாளர்கள் சம்பளம் உட்பட பல்வேறு வழிகளில் இவை செலவிடப்படும்.
'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகள் நடத்த அதிகபட்சம் ரூ. 1045 கோடி ஒதுக்கப்பட்டது. தேசிய விளையாட்டு கூட்டமைப்புக்கு ரூ. 325 கோடி, தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிறுவனத்துக்கு ரூ. 15 கோடி தரப்படும். தவிர தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையத்துக்கு ரூ. 21.73 கோடி வழங்கப்படுகிறது.
Advertisement