கர்நாடகா மாநிலம், கனகபுரா மாவட்டம், கங்கிலிபுறா பகுதியை சேர்ந்தவர் கலிமுல்லா என்பவர் மகன் சல்மான் கான், 23; வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் தந்தை இறந்ததால், ஓசூர் ராம்நகரிலுள்ள உறவினர் வீட்டில் வளர்ந்து வந்தார். அந்த வீட்டிலிருந்த, 17 வயது சிறுமியை சல்மான் கான் காதலித்தார். அந்த சிறுமியும் காதலை ஏற்ற நிலையில், சிறுமியின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்ததை அறிந்த சல்மான் கான், சிறுமியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, திருமணத்தை தடுத்தார்.
இது குறித்து, சிறுமியின் பெற்றோர் புகார்படி, ஓசூர் அனைத்து மகளிர் போலீசார், சல்மான் கானை அழைத்து எச்சரித்து அனுப்பினர். கடந்த மாதம், 10ல் சல்மான் கான் மாயமானார். இது குறித்து, அவர் தாய் ஹதாஜிபானு, 46, கடந்த மாதம், 26ல் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். விசாரணையில், சல்மான் கானை காரில் கடத்திச் சென்று, கர்நாடகா மாநிலம் தாவணகரே பகுதியில் கொலை செய்து, கல்லை கட்டி, ஆற்றில் வீசியது தெரிந்தது. கடந்த, 27ல் கர்நாடகாமாநில போலீசார் சடலத்தை மீட்டனர்.
ஓசூர் டவுன் போலீசார் கொலை வழக்குப்பதிந்து, ராம்நகரை சேர்ந்த ஜான்பாஷா, 36, முகமது அலி, 28, வாஜித், 25, சாதிக், 45, ஆகிய நால்வரை கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். இந்நிலையில், ஓசூரை சேர்ந்த ஸ்ரீகாந்த், 36, தர்மபுரி மாவட்டம், திருப்பாச்சிபுரத்தை சேர்ந்த கமலேசன், 28, ஆகிய இருவர், சேலம் ஜே.எம்., 4 நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரணடைந்தனர். அவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி: 2 பேர் கைது
தூத்துக்குடி ராஜீவ் நகரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் 34. ரயில்வேயில் வேலையில் சேர முயற்சித்து வந்தார். அவரிடம் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் மாரியப்பன் 65, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கீழமுந்தலை சேர்ந்த சந்திரன் மகன் ராஜேஸ்வரன் 28, மற்றும் சிலர் சேர்ந்து ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கடந்த ஆண்டு பல தவணைகளில் ரூ. 30 லட்சம் பெற்றனர்.
முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரரை மேற்கு வங்காளம் ஹவுராவுக்கு அழைத்துச் சென்று மெடிக்கல் செக்கப், போலிச் சான்றிதழ் வாங்கி கொடுத்து ரயில்வே பணிக்கு பயிற்சி எனக் கூறி டெல்லி, கொல்கத்தா என பல இடங்களுக்கும் அலைக்கழித்துள்ளனர். வேலை கிடைக்காமல் ஏமாற்றமடைந்த முத்துகிருஷ்ணன் தூத்துக்குடி எஸ்.பி., பாலாஜி சரவணனிடம் புகார் செய்தார். மாரியப்பன், ராஜேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். இவர்கள் பலரிடமும் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கோடியே 28 லட்சம் பணம் பெற்று மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.
மகளிர் இலவச பஸ்சில் திருடுவது 'ஈசி!'
கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில், நின்றிருந்த ஐந்து பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் மதுரையை சேர்ந்த பார்வதி, 67, அவரது மகன்கள் திவாகர்,36, கண்ணையா, 30, திவாகரின் மனைவியர் முத்தம்மா, 23, முத்துமாரி (எ) கீதா, 24, எனத் தெரிந்தது. இவர்கள், பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடுவதை வழக்கமாக கொண்டவர்கள் என்பதும் தெரிந்தது. போலீசார் அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து, 40 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
'மகளிருக்கான இலவச பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதில் நகை திருடுவது மிகவும் எளிது' என, கோவை போலீசாரிடம் பிடிபட்ட நபர், வாக்குமூலம் அளித்துள்ளார்.
காரில் சென்று தொடர் கொள்ளை மூன்று பேர் கைது; நகைகள் மீட்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் உட்கோட்ட கிராமங்களில் மர்ம நபர்கள், கார் மற்றும் பைக்கில் சென்று, வீடுகள் மற்றும் 'டாஸ்மாக்' கடைகளில் கொள்ளை அடித்து வந்தனர். கொள்ளையர்களை பிடிக்க, எஸ்.பி., மோகன்ராஜ் உத்தரவுப்படி, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். நேற்று முன்தினம் புதுார் கூட்ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
![]()
|
அவ்வழியே 'ஹூண்டாய் ஐ 20' காரில் வந்த பெண் உட்பட மூன்று பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர். தீவிர விசாரணையில், அவர்கள் சென்னை, பெரம்பூர் கோபி மகன் கார்த்திக், 19; எருக்கஞ்சேரி ராஜசேகர் மகன் பாலாஜி, 23; யுவராஜ் மனைவி சிந்து, 23, என்பது தெரிந்தது. மூவரும் தேவபாண்டலம் மற்றும் பகண்டை கூட்ரோட்டில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, ரிஷிவந்தியம், வடபொன்பரப்பி போன்ற பல பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடியுள்ளனர்.
மேலும், கனகனந்தல் டாஸ்மாக் கடையை உடைத்து, மது பாட்டில்களை திருடியுள்ளனர். இதையடுத்து, கார்த்திக் உட்பட மூவரையும் வடபொன்பரப்பி போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 35 சவரன் நகைகளை கைப்பற்றினர். மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
ரூ.3 கோடி 'ஹெராயின்' பறிமுதல்; 3 பேர் கைது
அசாம் மாநிலத்தின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட 1.36 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு சம்பவத்தில், பொகஜன் பகுதியில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் 304 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் தொடர்புடைய ஒருவரையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த இரு சோதனைகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் சர்வதேச மதிப்பு 3 கோடி ரூபாய் ஆகும்.
கோவா நீதிமன்றத்தில் கைவரிசை காட்டிய திருடன்
கோவா தலைநகர் பணஜியில் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றங்கள் பழமையான கட்டட வளாகத்தில் இயங்கி வருகின்றன. இங்குள்ள ஒரு அறையில், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் வைக்கப்பட்டிருந்தது. இதற்குள் நேற்று முன்தினம் நுழைந்த திருடன், இங்கிருந்த பணத்தை திருடிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
இத்திருட்டு சம்பவம் குறித்த விசாரணையால், நேற்று நடக்க இருந்த மூன்று நீதிமன்றங்களின் வழக்குகள் ஒத்தி வைக்கப்பட்டன. பணம் இருந்த அறையின் முன்புறம் காவலுக்கு போலீசார் இருந்த நிலையில், திருடன் பின்பக்கத்தில் இருந்த ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து தன் கைவரிசையை காட்டியது, விசாரணையில் தெரிய வந்தது. திருடப்பட்ட பணத்தின் மதிப்பு குறித்து தகவல் தர போலீசார் மறுத்துவிட்டனர்.
Advertisement