வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஏழு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். இந்த அம்சங்களை, சப்தரிஷிக்கள் என அவர் குறிப்பிட்டார்.
ஹிந்து சமயத்தில், அத்திரி, பாரத்வாஜர், ஜமதக்கினி, கவுதமர், காசியபர், வசிஷ்டர், விஷ்வாமித்ரர் ஆகியோர் சப்தரிஷிக்கள் என்றழைக்கப்படுகின்றனர். இவர்கள் நான்கு வேதங்களையும் இலக்கியங்களையும் தங்கள் தவ வலிமையால் கற்றறிந்தவர்கள். சூரியன் வழிபடும் இந்த சப்தரிஷிக்கள், மிகவும் போற்றப்படக் கூடியவர்கள்.
இந்த வகையில், பட்ஜெட் உரையில் நிர்மா சீதாராமன் கூறியதாவது: நாட்டின் 100 வது சுதந்திரத்தைக் கொண்டாட உள்ள 2047 ல், நம்முடைய நாட்டின் வளர்ச்சியை எதிர்நோக்கும் அடுத்த 25 ஆண்டுகள் அமிர்த காலமாக கருதப்படுகிறது. இந்த அமிர்த காலத்தில் நம் நாட்டின் வளர்ச்சிக்காக நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளின் துவக்கம் இந்த பட்ஜெட் ஆகும்.இந்த இலக்கை நோக்கி அமைந்துள்ள பட்ஜெட், ஏழு முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்டவை.
இவை ஒவ்வொன்றும் தமக்குள் தொடர்புடையவை.அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கடைசி எல்லை வரைக்குமான வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, நம் ஆதாரங்களை முழுமையாக பயன்படுத்துதல், பசுமை வளர்ச்சி, இளைஞர்கள் சக்தி, நிதித் துறை ஆகியவை இந்த சப்தரிஷிக்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
![]()
|
கவனம் ஈர்த்த சிவப்பு நிறம்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எப்போதும் கைத்தறி புடவை அணிவது வழக்கம். பட்ஜெட் தாக்கலான நேற்று பிரவுன் நிற 'பார்டர்' கொண்ட பிரகாசமான சிவப்பு நிற சேலை அணிந்திருந்தார்.
* கடந்த 2022ல் 'மெரூன்' நிற கைத்தறி புடவையும், 2021ல் சிவப்பு மற்றும் வெள்ளை நிற போச்சம்பள்ளி பட்டு சேலையும், 2020ல் நீல நிற பார்டருடன் மஞ்சள் நிற பட்டுப் புடவையும் அணிந்திருந்தார். 2019ல் முதல் பட்ஜெட்டில் தங்க நிற பார்டரில் இளஞ்சிவப்பு நிற மங்கல்கிரி பட்டுப் புடவை உடுத்தி இருந்தார்.
அதிக வார்த்தை... குறுகிய உரை
கடந்த 1991ல் 18 ஆயிரத்து 650 வார்த்தைகளுடன் நீளமான உரை நிகழ்த்தியவர் மன்மோகன் சிங். 2018ல் 18 ஆயிரத்து 604 வார்த்தைகளுடன் இரண்டாவது இடத்தில் அருண் ஜெட்லி உள்ளார். கடந்த, 1977ல் 800 வார்த்தைகள் என குறைந்த வார்த்தைகள் பயன்படுத்தியவர் ஹிருபாய் படேல்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஒரு மணி, 25 நிமிடங்கள் என குறுகிய நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். 2020ல் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார்.