வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பா.ஜ. மேலிடம் முன்வைத்த ஆலோசனைகள் அனைத்தையும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
'கடந்த 2019 லோக்சபா 2021 சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பா.ஜ.வுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காததே காரணம்' என சி.வி.சண்முகம் முனுசாமி போன்ற அ.தி.மு.க. தலைவர்கள் வெளிப்படையாகவே பேசத் துவங்கினார்.
செங்கோட்டையன் திண்டுக்கல் சீனிவாசன் டி.ஜெயகுமார் ஓ.எஸ்.மணியன் ராஜன் செல்லப்பா என்ற அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பா.ஜ.வுக்கு எதிரான மன நிலையில் இருப்பதை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.
கூட்டணியை தொடர்ந்தாலும் அ.தி.மு.க. -- பா.ஜ. இடையே இணக்கமான சூழல் இல்லை. பழனிசாமி - - பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்ட பின் நிலைமை மேலும் மோசமானது. அ.தி.மு.க.வுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ. நினைப்பதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தவிர மற்றவர்களிடம் பழனிசாமி பேசுவதில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மறைவால் காலியான ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் பிப்ரவரி 27-ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.
இத்தொகுதியில் 2021-ல் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா போட்டியிட்டார். எனவே இடைத்தேர்தலிலும் இத்தொகுதியை த.மா.கா.வுக்கு ஒதுக்கி விடலாம் என பா.ஜ. மேலிடம் பழனிசாமியிடம் தெரிவித்துள்ளது.
'இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் பா.ஜ.வின் தாமரை சின்னத்தில் யுவராஜா போட்டியிடட்டும்' என்றும் பா.ஜ. தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பா.ஜ. தேசிய பொதுச்செயலர் சி.டி.ரவி இது தொடர்பாக பழனிசாமியிடம் இரண்டு மூன்று முறை தொலைபேசியில் பேசியுள்ளார். த.மா.கா. தலைவர் வாசன் யுவராஜா ஆகியோரிடமும் பேசியுள்ளார். இதை ஏற்க மறுத்த பழனிசாமி வாசனிடம் பேசி அவர் வாயிலாகவே அ.தி.மு.க. போட்டியிடுவதாக அறிவிக்க செய்து விட்டார்.
இதனால் அதிர்ச்சிஅடைந்த பா.ஜ. தலைவர்கள் 'கட்சி பிளவுபட்டு இரட்டை இலை சின்னம் கிடைப்பது சந்தேகம் என்று நிலையில் அ.தி.மு.க. போட்டியிடுவது தி.மு.க.வுக்கு பெரும் சாதகமாகி விடும். எனவே இந்த இடைத்தேர்தலில் பா.ஜ. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் ஏற்க மறுத்த பழனிசாமி 'இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. தனி சின்னத்தில் போட்டியிட்டு செல்வாக்கை நிரூபிப்போம். அப்போது தான் உட்கட்சி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர முடியும்' என திட்டவட்டமாக கூறி விட்டார்.
பா.ஜ. மேலிடம் முன்வைத்த ஆலோசனைகளை நிராகரித்து அ.தி.மு.க. வேட்பாளராக தென்னரசுவை பழனிசாமி அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அ.தி.மு.க.வினர் பிரதமர் மோடியின் படத்தை கூட பயன்படுத்துவதில்லை.
இச்சூழலில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக அமித்ஷா பா.ஜ. தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்டோருடன் ஆலோசிக்க தமிழக பாஜ. தலைவர் அண்ணாமலை நேற்று டில்லி சென்றுள்ளார்.
![]()
|
கூட்டணியில் விலகல்?
பா.ஜ., கூட்டணியை பழனிசாமி கைவிடும் முடிவுக்கு வந்துள்ளதாக, அவரது ஆதரவு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், பழனிசாமி தரப்பினால், தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. 'அ.தி.மு.க., பணிமனை' என்ற பெயரில் இருந்த அலுவலகம், நேற்று 'தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பா.ஜ., தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி இயங்கி வரும் நிலையில், அ.தி.மு.க., பழனிசாமி தரப்பு, தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில், பணிமனை திறந்திருப்பது கேள்விக்குறியாகி உள்ளது.
மேலும், பிரசார பேனர்களிலும் பிரதமர் உள்ளிட்ட பா.ஜ., தலைவர்களின் புகைப்படங்களை தவிர்த்து இருந்தனர். இதனால், பா.ஜ., கூட்டணியில் இருந்து பழனிசாமி விலகி விட்டாரா; புதிய பெயரில் புதிய கூட்டணியை உருவாக்க பழனிசாமி முடிவு செய்துள்ளாரா என, பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், மாலை, 4:30 மணிக்கு, தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பேனர் மீது, ஸ்டிக்கர் ஒட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி என, மாற்றினர்.
Advertisement