வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : 'வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
சிறுபான்மையினர் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள், தமிழக வக்பு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கடந்த, 30ம் தேதி தலைமை செயலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு தலைமை வகித்த, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வக்பு வாரிய தரவுகளை பெற்று, அதன் அடிப்படையில், புதிய திட்டங்களை அறிமுகம் செய்து, செயல்படுத்த வேண்டும்.
வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; சொத்து ஆவணங்களை கணினிமயமாக்கி, மேம்படுத்த வேண்டும்.
![]()
|
வக்பு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி, வருவாயை அதிகரிக்க வேண்டும். புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, வாரிய செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை உருவாக்க வேண்டும். இவ்வாறு, முதல்வர் பேசினார்.
தலைமை செயலர் இறையன்பு பேசுகையில், ''வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்படாத, வக்பு நிறுவனங்களை பதிவு செய்ய, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். உலமா நல வாரியத்தில், அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். வாரிய சொத்துக்களை முறைகேடாக விற்பதை தடுக்க வேண்டும்,'' என, அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், அமைச்சர் மஸ்தான், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கூடுதல் தலைமை செயலர் மங்கத்ராம் சர்மா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.