வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: ஆபாச பட விவகாரத்தில் அரசு பள்ளி ஆசிரியை உட்பட இரண்டு பேருக்கு எதிரான குண்டர் சட்ட கைது உத்தரவை எதிர்த்து தாக்கலான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று தள்ளுபடி செய்தது.

மதுரை மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தவர் ராதிகா, 45. இவர் சில மாணவர்களுடன் பாலியல் தொடர்பில் ஈடுபடும் 'வீடியோ' வெளியானது.
இது அவருடன் தகாத நட்பை தொடர்ந்த வீரமணி, 39, என்பவரால் எடுக்கப்பட்டது. அந்த படங்கள், ராதிகா பார்த்து ரசிப்பதற்காக வீரமணியின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது.
இந்த படங்கள் 2021ல் பலருக்கு பகிரப்பட்டன. போலீசார் வழக்கு பதிந்தனர். வீரமணி, ராதிகா 2022 ஏப்., 1ல் கைது செய்யப்பட்டனர். ராதிகாவிடம் இருந்து மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டன.
இருவரையும் காவலில் எடுத்து விசாரித்த போலீசார், வாக்குமூலம் பதிவு செய்தனர். இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, 2022 ஜூன் 11ல் மதுரை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இருவர் தரப்பிலும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், 'குண்டர் சட்டத்தின் கீழ் கைது உத்தரவில் எந்த தவறும் இல்லை. கைது உத்தரவை எதிர்த்து ராதிகா தரப்பில் அனுப்பிய மனு முறையாக பரிசீலித்து நிராகரிக்கப்பட்டது' என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
வீரமணியை சுதந்திரமாக நடமாட அனுமதித்தால் மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தும்; குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். கைது உத்தரவில் எவ்வித தவறையும் நாங்கள் காணவில்லை. ராதிகா மனு தகுதி அடிப்படையில் ஏற்புடையதல்ல. இரு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு உத்தரவிட்டனர்.