வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: அதானி நிறுவனங்களின் தொடர் வெளியீடு (எப்.பி.ஓ) பங்கு விற்பனையை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ள அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, ‛முதலீட்டாளர்களின் நலனே முதன்மையானது, மற்றவை எல்லாம் இரண்டாம்பட்சம் தான்' என கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய தொழிலதிபரான கவுதம் அதானியின் நிறுவனங்கள் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவன பங்குகள் கடந்த ஒரு வாரமாக கடும் சரிவை சந்தித்து வருகிறது.
இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த கவுதம் அதானி, தற்போது 16வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனையடுத்து அந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான தொடர் பங்கு வெளியீடு (எப்.பி.ஓ) பங்கு விற்பனை மூலம் 4.55 கோடி பங்குகளை விற்று நிதித் திரட்டும் திட்டத்தை சமீபத்தில் அதானி குழுமம் செயல்படுத்தியது.
பங்குகள் கடும் சரிவை சந்தித்த நிலையிலும் கூட அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள் என 5.08 கோடி பேர் (112 சதவீதம்) அதானி பங்குகளில் முதலீடு செய்ய முன்வந்தனர். ஆனால் திடீரென, பங்கு விற்பனையை நிறுத்துவதாக கவுதம் அதானி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதானி நேற்று (பிப்.,1) கூறியதாவது: அதானி நிறுவனப் பங்குகள் தற்போது ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் முதலீட்டாளர்கள் நலனை கருத்தில் கொண்டு எப்.பி.ஓ பங்கு விற்பனையை திரும்ப பெற அதானி குழும இயக்குனர் குழு முடிவு செய்துள்ளது.
இந்தச் சூழலில் பங்கு விற்பனையைத் தொடர்வது கொள்கை ரீதியாக நியாயமான செயல் அல்ல என்பதால் விற்பனை பரிவர்த்தனையைத் திரும்பப் பெறுகிறோம்.
முதலீட்டாளர்கள் பணத்தையும் திரும்பத் தர ஏற்பாடுகள் செய்யப்படும். அதானி குழும நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

இன்று கவுதம் அதானி வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: எப்.பி.ஓ பங்கு விற்பனையை திரும்ப பெற்ற முடிவு பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கும். என்னை பொறுத்தவரை எனது முதலீட்டாளர்களின் நலன் முதன்மையானது; மற்றவை எல்லாம் இரண்டாம்பட்சம் தான். எனவே முதலீட்டாளர்களை சாத்தியமான இழப்புகளில் இருந்து காப்பதற்காக எப்.பி.ஓ.,வை திரும்ப பெற்றுள்ளோம்.
இந்த முடிவு எங்களின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. சரியான நேரத்தில் செயல்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். எங்களின் இருப்புநிலை ஆரோக்கியமானது மற்றும் சொத்துக்கள் வலுவானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.