
ஜி 20 என்பது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அர்ஜன்டைனா, அரேபியா உள்ளீட்ட பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பாகும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கல்வியை மேம்படுத்துவதே இந்த கூட்டமைப்பின் நோக்கமாகும்.இந்த கூட்டமைப்பிற்கு தலைமை தாங்கிய இந்தியா அதன் மூன்று நாள் கருத்தரங்கை சென்னையில் நடத்தியது.

கருத்தரங்கில் பேசி பேசி களைத்துப் போனவர்கள் மனம் மகிழ அனைவரும் சுற்றுலாவாக மாமல்லபுரம் அழைத்துச் செல்லப்பட்டனர். பல்லவர் கால கலைச்சிற்பங்கள் நிறைந்த மாமல்லையில் உள்ள ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல், கடற்கரை கோவில் ஆகிய இடங்களை பார்த்து பெரிதும் ரசித்தனர்.

இவர்களுக்கு நமது கலை கலாச்சாரம் பராம்பரியத்தை சொல்லும் விதத்தில் கண்காட்சி கூடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கோ-ஆப்டெக்ஸ் சார்பில் 1330 குறள்களும் பட்டு நுாலால் நெய்யப்பட்ட பட்டுப்புடவையைப் பார்த்து பெரிதும் வியந்தனர்.

பூம்புகார் நிறுவனம் சார்பில் தஞ்சாவூர் தட்டு,குத்து விளக்கு,மரச்சிற்பம் செய்வது பற்றிய நேரடி விளக்கத்தை கேட்டும் பார்த்தும் மகிழ்ந்தனர்.

பெரும்பாலும் மாலை 6 மணிக்கு மேல் கடற்கரை கோவிலுக்கு பார்வையாளர்கள் அனுமதி கிடையாது. ஆனால் இந்த விசேஷ விருந்தினர்களுக்காக விசேஷமாக விளக்கு வெளிச்சம் ஏற்படுத்தப்பட்டு அந்த வெளிச்சத்தின் அழகில் கடற்கரை கோவிலை பார்க்கும்படியான ஏற்பாடுகள் செய்திருந்தனர். இது கடற்கரை கோவிலின் அழகை இன்னும் கூடுதலாக்கியது. தங்கள் மனம் கவர்ந்த மாமல்லையையின் பின்னனியின் தங்களை விதம்விதமாக படமெடுத்துக் கொண்டனர்.

-எல்.முருகராஜ்