வேலூர்: அனைத்து துறை அதிகாரிகளுடன் மக்கள் நலத்திட்டங்கள் செயலாக்கத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

'கள ஆய்வில் முதல்வர்' நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வேலூர் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதையடுத்து வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும். சாலை மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய துறைகளில் செ யல்பாடு பற்றி ஆலோசிக்கப்பட்டது.
அனைத்து துறை அதிகாரிகளுடன் மக்கள் நலத்திட்டங்கள் செயலாக்கத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக தகவல் வருகிறது. கலெக்டர்கள் அதனை தடுக்க வேண்டும்.

2022ம் ஆண்டிற்கான சில பணிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இது நல்ல நிர்வாகத்திற்கு அழகல்ல. அனைத்து அரசு அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் திட்டங்கள் விரைவாக முடிவுறும். அரசின் முன்னுரிமை திட்டங்கள் கூடுதல் கவனத்துடன் அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும்.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர கள ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.