வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளரின் வேட்புமனுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி கையெழுத்திடுவதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை எதிர்த்து பழனிசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பதிலளிக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில், பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனு: '' பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது. மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து விவகாரங்களும் அடங்கியுள்ள நிலையில், இடைக்கால மனு என்பது விசாரணைக்கு உகந்தது அல்ல.

பழனிசாமிக்கு கட்சியில் அதிகாரம் கேட்டு உரிமை கோர முடியாது. எனவே, அவர் தரப்பில் தற்போது தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தால், அது பொதுக்குழு வழக்கின் தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.