வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தை விமர்சித்திருந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, பல்கலை சார்பில், ‛இது மத்திய பல்கலைக்கழகம், உங்கள் ஆசிர்வாதம் இன்றி, பிரதமரின் வழிகாட்டுதலின்படி நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம்' என பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிடப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் சாந்திநிகேதனில் முறைகேடாக வைத்துள்ள நிலங்களை ஒப்படைக்க கோரி நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென்னுக்கு விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் கடிதம் அனுப்பியது. இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த அமர்த்தியா சென், ‛சாந்திநிகேதனில் நான் வைத்துள்ள நிலங்கள் அனைத்தும் என் அப்பாவால் வாங்கப்பட்டது.
சில நிலங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டது. இங்கிருந்து என்னை வெளியேற்ற முயற்சி நடக்கிறது' என விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் மீது குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சாந்தி நிகேதனில் உள்ள அமர்த்தியா சென் வீட்டுக்கு சென்று அவர் வைத்துள்ள நிலங்களுக்கு சொந்தமான ஆவணங்களை வழங்கினார். பின்னர் மம்தா கூறுகையில், ‛இதற்கு மேல் மத்திய பா.ஜ., அரசு அமர்த்தியா சென்-ஐ இழிவுப்படுத்துவதை பொறுத்துக் கொள்ளமுடியாது.
அவர் வைத்துள்ள நிலங்களின் ஆவணங்களை கொடுத்துள்ளேன். பல்கலைக்கழகம் மீது சட்டப்படி அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் மாணவர்களை காவிமயப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தாமல் பல்கலைக்கழக பணிகளில் ஈடுபட வேண்டும். பல்கலைக்கழகம் அமர்த்தியா சென்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து அறிக்கை ஒன்றை விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‛விஸ்வபாரதி பல்கலைக்கழகம் ஒரு மத்திய பல்கலைக்கழகம். உங்கள் ஆசிர்வாதம் இன்றி நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம்.
ஏனெனில் பிரதமர் மோடி வழிகாட்டுதலின் படி செயல்படுகிறோம். முதல்வர் காதுகள் வழியாக பார்ப்பதை நிறுத்திவிட்டு, அவரது மூளையை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.