உத்திரமேரூர்:செங்கல்பட்டில் இருந்து, உத்திரமேரூக்கு காலை 8:30 மணி முதல், 9:00 மணி வரை தடம் எண் 68 என்ற அரசு பேருந்துகள் இயங்குகின்றன.
உத்திரமேரூர் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும், புக்கத்துறை- உத்திரமேரூர் சாலை வழியிலான கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இப்பேருந்தில் பயணித்து பள்ளிக்கு செல்கின்றனர். அவ்வாறு, பேருந்தில் பயணம் செய்யும் போது, மாணவர்கள் எல்லை மீறிய அட்டகாசத்தில் ஈடுபடுவதாக பலரும் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, உத்திரமேரூர்- செங்கல்பட்டு தடம் எண் 68 அரசு பேருந்தை இயக்கும் நடத்துனர் ஒருவர் கூறியதாவது:
பேருந்தில் கூட்டம் குறைவாக இருந்தாலும் கூட, பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு தான் பயணிக்கின்றனர். சிலர், படிக்கட்டில் தொங்கியவாறு, பேருந்தின் கூரையில் ஏறவும் முயற்சி செய்கின்றனர். கேட்டால், சிறிது நேரம் பேருந்துக்குள் ஏறுவதைப் போல பாவனை செய்து விட்டு, மீண்டும் படிக்கட்டில் தொங்குகின்றனர்.
பெண் பயணியரை கேலி, கிண்டல் செய்து அரட்டையில் ஈடுபடுகின்றனர். படியில் தொங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்வதோடு, மற்ற பயணியருக்கும் தொந்தரவு அளிக்கின்றனர்.
எனவே, இந்த வழித்தடத்தில், குறிப்பிட்ட துாரத்திற்கு இடையிலான ஒவ்வொரு பேருந்து நிறுத்தங்களிலும், போலீசார் நின்று கண்காணிப்பதோடு பேருந்துகளின் படியில் தொங்கியும், கூச்சலிட்டும் பயணியருக்கு இடையூறு செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.