காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட விளக்கடி கோவில் தெரு, நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாக உள்ளது. செங்கல்பட்டு, தாம்பரம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் இருந்து, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் செல்லும் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும், இந்த விளக்கடி கோவில் தெரு வழியாக தான் செல்கிறது.
அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை, கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, படு மோசமாக காட்சியளிக்கிறது. சாலை முழுதும் ஏழு இடங்களில் மோசமான பள்ளம் ஏற்பட்டும், சாலை சிதைந்து போயும் காட்சியளிக்கிறது.
இப்பள்ளங்களால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விழுந்து படுகாயம் அடைகின்றனர். ஆறு மாதங்களாக மோசமான நிலையில் இருக்கும் இதே வழியாக தான், வாலாஜாபாத், படப்பை போன்ற பகுதிகளுக்கு கலெக்டர் ஆய்வுக்கு செல்கிறார்.
ஆனால், இச்சாலையை, கலெக்டரும், மாநகராட்சி மேயரும் கண்டுகொள்வதாக இல்லை.
அவ்வப்போது, கட்டுமான கழிவுகளை கொட்டி மாநகராட்சி நிர்வாகம் கடமைக்கு சீர் செய்வர்.
இரு நாட்களிலேயே பழையபடி, மோசமான நிலைக்கு சாலை மாறிவிடும்.
வாகன ஓட்டிகளுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் முன்பாக, இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.