உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த பெருநகரில், பட்டுவதனாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா நடப்பது வழக்கம். இந்தாண்டிற்கான விழா, கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், சுவாமி பல்வேறு வாகனங்களில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. 31ம் தேதி, குளக்கரையில் இருந்து, கோவில் வந்தடைந்த பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பட்டுவதனாம்பிகைக்கு திருக்கல்யாணம் நடந்தது.
நேற்று காலை, ரதோற்சவ நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. மலர் அலங்காரத்தில் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார்.
அதை தொடர்ந்து, தேரின் வடம் பிடித்த பக்தர்கள், மாடவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக இழுத்தனர். இதில், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பலர் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.