உடுமலை:2023--24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்றுமுன்தினம் பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து உடுமலை மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நிகரவருவாய் வரவு உயரும்
வி.ஜெயசிங், பொருளாளர், உடுமலை நாடார் பேரவை: மத்திய பட்ஜெட்டில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வடகிழக்கு இந்திய மாநிலங்கள் வளர்ச்சிக்கு என, ரூ.2,491 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரிய அம்சம். அன்னிய செலாவணி தற்போதைய, 9 மாதங்களுக்கான இறக்குமதி தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக பட்ஜெட் அமைந்துள்ளது.
வருவாய் இனத்தின், வரவு கடந்த ஆண்டை விட, ரூ.2.8 லட்சம் கோடி உயர உள்ளது. அதே நேரத்தில், வருவாய் வகையில் செலவு, ரூ.0.4 லட்சம் கோடியாக மட்டுமே உயர உள்ளது. நிகர வருவாய் வரவு உயர திட்டமிட்டுள்ளது, நிதி துறையில் வரவேற்கத்தக்க அம்சமாகும்.
டிஜிட்டல் நுாலகம்
முகமதலி ஜாபர், கல்லுாரி பேராசிரியர்: மத்திய அரசு பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதங்களில், மாற்றம் செய்யப்பட்டுள்ள சலுகைகள் வரவேற்கத்தக்கது. குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கான ரிபேட் ரூ.5 லட்சத்திலிருந்து, ரூ.7 லட்சத்திற்கும் உயர்த்தியுள்ளது, நல்ல அம்சமாகும்.
அது போல் 'ஏகலைவா' மாதிரி பள்ளி திட்டத்திற்காக ரூ.5,943 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும், தேசிய அளவில் டிஜிட்டல் நூலகம் என்ற திட்டமும் இளைய சமுதாயத்தினருக்கு பயன்படும் வகையில் உள்ளது.
தொழில்துறை வளர்ச்சி
ஆர். ரூபிகா, வரி சட்ட ஆலோசகர், கே.சி.எஸ்., அசோசியேட்ஸ்: மத்திய நிதி அமைச்சர், தாக்கல் செய்த பட்ஜெட்டில் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கான வரிச் சட்டங்களில் அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் தொழில்துறையில் பெரும் வளர்ச்சியையும், உத்வேகத்தையும் கொடுக்கும்.
மேலும், பசுமை பாதுகாக்கும் வகையில், சூரிய ஆற்றல் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பேட்டரி தயாரிக்க உதவும், மூலப்பொருட்கள், உபகரணங்கள் இறக்குமதி செய்ய சுங்கவரி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
விவசாய மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள, ஒரு லட்சத்து, 25 ஆயிரம் கோடி ரூபாய் சரியான முறையில், பயன்படுத்தும் போது மிகப்பெரிய வளர்ச்சியை காண முடியும்.