உடுமலை:முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நாளை துவங்கி வரும், 21ம் தேதி வரை போட்டி நடக்கிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், திருப்பூர் மாவட்டத்தில் நடக்கவுள்ள, முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான அட்டவணை, மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவினர், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், அரசு ஊழியருக்கு நாளை மற்றும் 5ம் தேதி கபடி போட்டி, ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் நடக்கிறது.
தவிர, 7ம் தேதி நஞ்சப்பா, பள்ளியில், பள்ளி- கல்லுாரி அணிகளுக்கு கூடைப்பந்து போட்டி; 8ம் தேதி, சிக்கண்ணா கல்லுாரி உள்விளையாட்டு அரங்கில் தனிநபர், பள்ளி, கல்லுாரி அணிகளுக்கும், 9ம் தேதி அரசு ஊழியர் மற்றும் பொதுப்பிரிவினருக்கு பேட்மின்டன் போட்டி நடக்கிறது.
இருபாலர் அரசு ஊழியர்களுக்கு சதுரங்க போட்டி வரும், 8ம் தேதி, உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. அதே நாளில் பள்ளி மாணவ, மாணவியருக்கான டேபிள் டென்னிஸ், அனைத்து பிரிவினருக்கான ஹாக்கி போட்டியும் நடத்தப்படுகிறது.
நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வரும், 10 மற்றும், 17ம் தேதி அனைந்து பிரிவினருக்கான வாலிபால் போட்டி நடக்கிறது.
மகளிர், மாணவியர் வாலிபால், 12ம் தேதி ஜெய்வாபாய் பள்ளியில் நடத்தப்படுகிறது.
மேற்கண்ட நாட்களில் சிலம்பாட்டம் போட்டியும், ஜெய்வாபாய் பள்ளியில் நடக்கிறது.
வரும், 14ம் தேதி நஞ்சப்பா பள்ளி கால்பந்து போட்டி நடக்கும்; அதே நாளில், சிக்கண்ணா கல்லுாரியில், கல்லுாரி மாணவருக்கு கால்பந்து போட்டியும் நடக்கும். 15ல், பள்ளி, கல்லுாரி மாணவியர் கால்பந்து போட்டி நடக்கிறது.
அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், 17, 18ம் தேதிகளில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், அரசு ஊழியர், பொதுப்பிரிவினருக்கான தடகள போட்டிகள் நடக்கவுள்ளது.
நிறைவாக 21ம் தேதி, மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
மைதானத்தை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், கிரிக்கெட் போட்டி நடக்கும் நாள், இடம் இன்னமும் முடிவு செய்யப்பட்டவில்லை. அனைத்து பிரிவினருக்கான கிரிக்கெட் போட்டி நடக்கும் நாள், பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் கூறுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில், போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுடன். 14 ஆயிரத்து, 291 பேர் பதிவு செய்துள்ளனர். தனிநபர், குழு விளையாட்டுப்போட்டிகள் அனைத்தும் காலை, 8:00 மணிக்கு துவங்கும். விளையாட்டு போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளோர். உரிய பிறப்புச்சான்றிதழ், ஆதார் கார்டு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, 74017 03515 என்ற எண்ணில் அழைக்கலாம்,'' என்றார்.