சத்தரை:கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சியிலிருந்து, எறையாமங்கலம் வழியாக, மேல்நல்லாத்துார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.
இதன் வழியே அரசு, தொழிற்சாலை பேருந்து, இருசக்கர வாகனம் என, தினமும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையோரம் உள்ள சத்தரை ஊராட்சி நிழற்குடை எதிரே, சத்தரை குட்டை உள்ளது. இந்த குட்டைக்கு தடுப்பு வேலி இல்லாததால், இச்சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள், மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில், நெடுஞ்சாலையோரம் மின் விளக்குகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம், சத்தரை குட்டையைச் சுற்றி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.